பதவி உயர்த்தப்பட்ட ஏ.டி.எஸ்.பி.களுக்கு பணியிடம் ஒதுக்கீடு
தமிழக காவல்துறையில் அண்மையில் பதவி உயர்த்தப்பட்ட 30 ஏ.டி.எஸ்.பி.களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டது. 20 ஏ.டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழக காவல்துறையில் அண்மையில் பதவி உயர்த்தப்பட்ட 30 ஏ.டி.எஸ்.பி.களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டது. 20 ஏ.டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தமிழக காவல்துறையில் சுமார் 51 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ஏ.டி.எஸ்.பி.) பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால் காவல்துறையில் நிர்வாக ரீதியாகவும், பணி ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டது. அதே வேளையில் காவல்துறையில் ஏ.டி.எஸ்.பி.யாக இவ்வாண்டு பதவி உயர்வு பெறுவதற்கு 16 டி.எஸ்.பி.கள் மட்டுமே தகுதி உடையவர்களாக இருந்தனர். 16 பேரையும் ஏ.டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு செய்தாலும், முக்கியமான ஏ.டி.எஸ்.பி. பணியிடங்கள் காலியாகவே இருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் தகுதியுடைய 16 டி.எஸ்.பி.களுக்கு,அடுத்த நிலையில் இருந்த 35 டி.எஸ்.பி.களையும் ஏ.டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்திலும் காவலர் சிறப்புச் சட்டத்தில் சிறு, சிறு மாற்றங்களைச் செய்து, 51 டி.எஸ்.பி.களுக்குப் ஏ.டி.எஸ்.பி.களாகப் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் உள்துறை கடந்த 7-ஆம் தேதி உத்தரவிட்டது.
இவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் 30 பேருக்கு பணியிடங்களை ஒதுக்கி புதன்கிழமை தமிழக அரசின் உள்துறை உத்தரவிட்டது.
இதேபோல மாநிலம் முழுவதும் 20 ஏ.டி.எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. புதிய பணியிடங்களில் ஏ.டி.எஸ்.பி.கள் ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.