தமிழ்நாடு

கன்னிமாரா நூலகத்தில் பழமையான புத்தகங்கள் கண்காட்சி: ஆயிரக்கணக்கில் பார்வையிட்ட புத்தக ஆர்வலர்கள்

DIN

உலக புத்தக தினத்தையொட்டி, சென்னை கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்று வரும் பழமையான புத்தகங்களின் கண்காட்சியை கடந்த இரண்டு நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளனர். இந்தக் கண்காட்சி புதன்கிழமையுடன் (ஏப். 25) முடிவடைகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம் இந்தியாவிலேயே மிகப் பழமையான நூலகமாகும். இந்த நூலகத்தில் அரசியல், இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அதில், குறிப்பாக சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிகப் பழமையான புத்தகங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

உலக புத்தக தினத்தையொட்டி, கன்னிமாரா நூலகத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தகங்களின் கண்காட்சி திங்கள்கிழமை (ஏப். 23) தொடங்கி புதன்கிழமை (ஏப். 25) வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

பழமையான நூல்கள்: இந்தக் கண்காட்சியில், நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட தமிழகத்தின் முதல் அச்சுக் கூடத்தில் 1781-இல் பதிக்கப்பட்ட திருச்சபையின் வழக்கங்கள் குறித்து விளக்கும் 'ஞான முறைகளின் விளக்கம்', வீரமாமுனிவரின் கையெழுத்துப் பிரதியைக் கொண்டு, புதுச்சேரி ஜென்ம ராக்கினிமாதா கோயில் அச்சகத்தில் 1852-இல் அச்சடிக்கப்பட்ட 'தேம்பாவணி-இரண்டாயிரம் காண்டம்', 1822-இல் வெளியான 'செந்தமிழ்' என்ற தமிழ் இலக்கிய நூல், தமிழில் வெளியான முதல் புத்தகமான 'தம்பிரான் வணக்கம்', சேஷகிரி சாஸ்திரி என்பவர் எழுதி 1884-இல் வெளியான 'ஆரிய, திராவிட வரலாறு', இந்திய பொறியியல் துறை குறித்து 1931-இல் வெளிவந்த 'இந்தியன் இன்ஜினியரிங்' என்ற வார இதழ், 1885-இல் வெளிவந்த சென்னை துறைமுகத்தின் கட்டுமானம் குறித்து விளக்கும் புத்தகம், 1889-இல் வேளாண்மை தொடர்பாக ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, கிரேக்க லத்தீன் மொழியில் 1548-இல் வெளியான 'புளுட்டோவின் தத்துவங்கள்', லண்டனில் 1608-இல் ஆங்கிலத்தில் பதிக்கப்பட்ட பைபிள், 'இமயமலையில் உள்ள தாவரங்கள்', 'மதுரா', விலங்குகள் குறித்த ஆராய்ச்சி புத்தகங்கள் என பல்வேறு தலைப்புகளில் 200-க்கும் மேற்பட்ட மிகப் பழமையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. 

மிகவும் பயனுள்ள கண்காட்சி: இதுகுறித்து சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த கிருத்திகா பாரதி என்பவர் கூறுகையில், 'இந்தக் கண்காட்சி குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தப் புத்தகங்களைப் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள அச்சு எழுத்து வடிவங்கள், வார்த்தைகள் ஆகியவை குறித்த அறிந்துகொள்ள முடிகிறது. அதிலும் குறிப்பாக 85 செ. மீ. நீளமும், 60 செ.மீ. அகலமும் கொண்ட இந்தியா, ஆசியா வரைபடங்கள், ஓவிய நூல்கள் பழமையான புகைப்படங்கள் ஆகியவை அடங்கிய புத்தகங்கள் குழந்தைகளை மிகவும் ஈர்த்தன. மிகவும் பயனுள்ள இந்தக் கண்காட்சியை ஆண்டுதோறும் நடத்த வேண்டும்' என்றார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வை: இதுகுறித்து கன்னிமாரா நூலகத்தின் நூலகர் பி.மீனாட்சிசுந்தரம் கூறுகையில், 'கன்னிமாரா நூலகத்தின் பழைய கட்டடத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. மற்ற நாள்களில் அங்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கண்காட்சியைப் பார்வையிட்டுள்ளனர் என்றார்.

இன்றும் பார்வையிடலாம்: இன்றுடன் (ஏப்.25) நிறைவடையும் இக்கண்காட்சியை காலை 10 முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT