பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மதுரை சித்திரைத் திருவிழாவில், திங்கள்கிழமை காலை பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது 'கோவிந்தா' என்ற கோஷத்துடன் லட்சக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன்
மதுரை சித்திரைத் திருவிழாவில், திங்கள்கிழமை காலை பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது 'கோவிந்தா' என்ற கோஷத்துடன் லட்சக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் அவரை வழிபட்டனர்.
மீனாட்சி சுந்தரேசுவரர், அழகர்மலை கள்ளழகர் கோயில் ஆகியவற்றை இணைத்து மதுரை சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், அழகர்மலையிலிருந்து மதுரைக்கு சனிக்கிழமை மாலை கள்ளழகர் புறப்பட்டார்.
அவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. புதூர், புதுநத்தம் சாலை வழியாக தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு கள்ளழகர் வந்தார்.
அங்கு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடிக்கொண்டு, வைகை ஆற்றுக்கு திங்கள்கிழமை அதிகாலை 1 மணிக்கு மேல் புறப்பாடானார். இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசிக்க காத்திருந்தனர்.
இந்நிலையில், வீரராகவப் பெருமாள் காலை 5.34 மணிக்கு வெள்ளிக் குதிரை வாகனத்தில் வைகையாற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் எழுந்தருளினார்.
வீரராகவப் பெருமாள் எழுந்தருளிய சிறிது நேரத்தில் வைகை ஆற்று முகத்துவாரத்துக்கு கள்ளழகர் வந்தார். அவருக்கு முன்பாக பூச்சர கூடை, வைணவ சின்னம் பொறித்த விசிறிகள், தீவெட்டி ஆகியவை கொண்டு வரப்பட்டன.
ஆற்றின் வடகரை பகுதியில் இருந்த இரு மண்டகப்படிகளில் எழுந்தருளிய நிலையில், காலை 5.46 மணிக்கு ஆற்றின் கரைக்கு வந்த அழகரை ஆற்றுக்குள் இருந்த வீரராகவப் பெருமாள் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ஆற்றுக்குள் அழகர் இறங்கினார். காலை 5.52 மணிக்கு பூக்கள் மிதந்த தண்ணீர் தொட்டியை தாண்டி வந்த கள்ளழகரை அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்ட பிரமுகர்கள் வழிபட்டனர்.
அழகர் ஆற்றில் இறங்கும்போது பச்சைப் பட்டு உடுத்தியிருந்தார். இதனால் நாட்டில் அமைதியும், வளமும் ஏற்படும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அழகர் ஆற்றில் இறங்கியதும் கோவிந்தா...கோவிந்தா... என கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோஷமிட்டு, ஆற்று நீரை உற்சாகமாக அவர் மீது தெளித்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சர்க்கரை நிரம்பிய சொம்பில் சூடம் ஏற்றி வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் மண்டகப்படிக்கு கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் உள்ளிட்டோர் வழிபட்டனர்.