மே 4-இல் குடியரசுத் தலைவர் வேலூர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் வேலூருக்கு வெள்ளிக்கிழமை (மே 4) வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாட்டுப்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் வேலூருக்கு வெள்ளிக்கிழமை (மே 4) வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாட்டுப்
பணிகளை சென்னை நுண்ணறிவுப் பிரிவு உதவி இயக்குநர் முரளிதரன், பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
வேலூர், பாகாயம் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா, ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆகியவற்றில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
வேலூருக்கு வெள்ளிக்கிழமை (மே 4) வருகை தர உள்ளார். இதையொட்டி, காலை 10 மணியளவில் சென்னைக்கு விமானம் மூலம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபுரம் தங்கக்
கோயில் பகுதிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பாகாயம் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர், மாலை 3 மணியளவில் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் நடைபெறும் யாக பூஜையில் பங்கேற்று, நாராயணி மருத்துவமனையில் ரூ. 10 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன இருதய
அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைக்கிறார். பின்னர், மாலை 5 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் தில்லி
செல்கிறார். இந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் பங்கேற்கிறார்.
இதனிடையே, குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சென்னை நுண்ணறிவுப் பிரிவு உதவி இயக்குநர் முரளிதரன், பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்
டி.பி.சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
முதலில் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் விழா நடைபெறும் அரங்கம், நாராயணி பீடம் ஆகியவற்றை பார்வையிட்ட அவர்கள், தொடர்ந்து ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் அமைக்கப்பட்டு வரும்
ஹெலிகாப்டர் தளத்தையும் பார்வையிட்டனர். பின்னர், ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் அதிகாரிகளுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், கோட்டாட்சியர் செல்வராஜ், வட்டாட்சியர்
பாலாஜி, நாராயணி பீடத்தின் மேலாளர் சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.