கல்லணை திறந்து 15 நாள்களாகியும் காரைக்காலுக்குரிய காவிரி நீர் முறையாக வந்து சேராததால் ஆறுகள், வாய்க்கால்கள் வறண்ட நிலையிலேயே காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அடுத்த ஒரு வாரத்தில் கடைமடைக்குத் தேவையான நீர் பரவலாக வந்துவிடும் என தமிழக பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.
நிகழாண்டு கர்நாடகத்தின் நீர்பிடிப்புப் பகுதியில் நீடித்த மழையால், அம்மாநில அணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணைக்கு இதனால் நீர் வரத்து அதிகரித்து, அணை 120 அடியை எட்டியது. பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், கல்லணைக்கு வந்த தண்ணீர் கடைமடை பாசனத்துக்காக கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் காவிரி தொடர்பாக வழங்கிய இறுதித் தீர்ப்புக்குப் பின் சம்பா பருவத்துக்கு தண்ணீர் வரத் தொடங்கியது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதுவை யூனியன்பிரதேச பகுதியான காரைக்காலுக்குரிய 7 டி.எம்.சி. பங்கீட்டை வழங்கவேண்டும் என கல்லணை திறப்பு நிகழ்ச்சியில் அழைப்பின் பேரில் பங்கேற்கச் சென்ற புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், தமிழக அமைச்சர்களிடம் வலியுறுத்தினார்.
பொதுவாக கல்லணை திறந்துவிட்டால் 3 அல்லது 4-ஆம் நாள் காரைக்கால் கடைமடையின் தலைப்புப் பகுதிக்கு தண்ணீர் வந்துவிடும். ஆனால் 29-ஆம் தேதிதான் காரைக்கால் எல்லைக்கு வந்துசேர்ந்தது. அதுவும், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி காரைக்கால் வந்த காவிரி நீரை வரவேற்க புதுச்சேரியிலிருந்து வந்து காரைக்காலில் முகாமிட்டார். எனினும் தண்ணீர் வந்துசேரவில்லை. காரைக்கால் பொதுப்பணித்துறையினர் தமிழக அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்து, தண்ணீர் விடுவிக்கச் செய்தனர். இதன்பேரில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
காவிரி நீரை விகிதாச்சார அடிப்படையில் எந்தெந்த மாதத்தில், எவ்வளவு தரவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக கூறியிருப்பதாகவும், இதனை தமிழக அரசு முறையாக அமல்படுத்தும் என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் வி.நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
காவிரி நீர், கடந்த மாதம் 29-ஆம் தேதி காரைக்கால் பகுதி நூலாற்றின் வழியே நுழைந்தது. ஆனால் பரவலாக இது திருமலைராஜனாறு, பிரவடையானாறு, நண்டலாறு போன்ற நீர்நிலைகளில் பாயும் வகையில் இல்லை. இந்த பெரிய ஆறுகளின் வழியே நீர் வெளியேறினால்தான், கிளை ஆறுகளின் வழியே வாய்க்கால்களில் நீர் பாய்ந்து, வயல்களுக்கு கொண்டு செல்லமுடியும். ஆடிப்பெருக்கு நாளில் காரைக்காலில் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் வந்துவிடும். சிறப்பாக வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்று எண்ணியிருந்த மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.
அரசலாறு, திருமலைராஜனாறின் குறிப்பிட்ட பகுதி வரை மட்டும் காவிரி நீர் வந்தது. நீர் வரத்திருந்த பகுதியில் மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிபெருக்கு வழிபாட்டில் ஈடுபட்டனர். திருமலைராஜனாறு மற்றும் மற்ற கடைமடை அணைகள் (மதகுகள்) வரை நீர் வரத்து ஏற்படவில்லை.
காரைக்கால் பகுதி விவசாயிகள் பலரும் தங்களது விளைநிலத்தை உழுது தயார்படுத்திவைத்திருக்கின்றனர். காவிரி நீரை உடனடியாக பயன்படுத்த மாட்டோம். தற்போதே விதைத்துவிட்டால், பருவமழைக் காலத்தின்போது பூ பூக்கும் பருவத்தில் மழை மற்றும் காற்றினால் பாதிக்கும். எனவே ஆடி மாத இறுதியில் விதைப்புப் பணியை தொடங்குவோம் என தெரிவித்தனர்.
தொடக்க நிலையிலேயே தண்ணீரை முறையாக வரவழைத்தால் மட்டுமே காரைக்கால் நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கமுடியும். இதுகுறித்து புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தனி கவனம் செலுத்தி, காரைக்காலில் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் விடும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் பிரிவுத் தலைவர் எஸ்.எம்.தமீம் கூறினார்,
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன் கூறும்போது, ஆடிப்பெருக்குக்கு தண்ணீர் தேவை என கேட்டபோது தமிழக பொதுப்பணித்துறையினர் விடுவித்தனர். கல்லணையிலிருந்து வரும் தண்ணீர் தற்போது தமிழகத்தின் பகுதிக்கு பயன்படுத்தப்படுகிறது. காரைக்காலுக்குரிய தண்ணீர் கண்டிப்பாக வந்துசேரும். அடுத்த ஒரு வாரத்தில் காரைக்கால் அனைத்து ஆறுகள், வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடுகள் நடந்துவருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.