தமிழ்நாடு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் எங்களை களங்கப்படுத்துகின்றனர்: இந்து சமய அறநிலைய பணியாளர்கள் குற்றச்சாட்டு

DIN


சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தங்களைக் களங்கப்படுத்துவதாக இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:-
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பொன் மாணிக்கவேல் கடந்த 2012 -ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார். அவர் திருக்கோயில்களுக்குச் சொந்தமான சிலைகள் குறித்த விவரங்களை புகைப்படத்துடன் அளிக்கும்படி கோரியிருந்தார். ஆனால், பாதுகாப்பு கருதி விவரங்களைத் தர இயலாது' என முன்னாள் ஆணையாளர் தனபால் தெரிவித்திருந்தார்.
இதனால் அவர் மீது கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட அனைத்து அலுவலர்களும், முன்னாள் ஆணையாளர் முறைகேடு செய்ததாக வாக்குமூலம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சோமாஸ்கந்தர் சிலை செய்தது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முத்தையா ஸ்தபதி விசாரணையின்போது, கூடுதல் ஆணையாளர் கவிதா கூறியதன் அடிப்படையில் தங்கம் வசூலிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.
இவ்வாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவானது, இந்து சமய அறநிலையத் துறையின் அலுவலர்களுக்கு எதிராக பெறப்படும் புகார்கள் மீது அவர்களுக்கு போதிய வாய்ப்பளித்து முறையாக விசாரணை மேற்கொள்ளாமல் அவர்களை கைது செய்யும் போக்கிலேயே செயல்பட்டு வருகிறது. 
முயற்சியில்லை: இந்து சமய அறநிலையத் துறை அலுவலக ஆவணங்களின்படி, 1920 முதல் 2017 முடிய 803 திருக்கோயில்களில் 2,145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் திருடு போய் உள்ளன. இதில், 56 சிலைகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் 18 மட்டும் கோயில்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 33 திருக்கோயில்களில் நடைபெற்ற களவுகளில் காணாமல் போன 385 சிலைகள் குறித்த வழக்குகள், சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என காவல் துறையால் முடிக்கப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, வழக்குகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு சிலைகளை மீட்பதற்கு எவ்வித முயற்சியையோ, நடவடிக்கையோ சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மேற்கொள்ளவில்லை. ஆனால், புதிதாக பொய்ப் புகார்களின்அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அறநிலையத் துறை அலுவலர்களையும், பணியாளர்களையும் களங்கப்படுத்தும் பணியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT