தமிழ்நாடு

நூற்றாண்டுகளைக் கடந்த திராவிட இயக்கப் பாரம்பரியம்: கருணாநிதிக்குப் பின்?

கே.வி.ஆர்

தமிழகத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த திராவிட இயக்கத்தின் பயணத்தில்,  கருணாநிதியின் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்த போகிறது என்று பார்க்கலாம்.

தமிழகத்தில் நூறு ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்க செயல்பாடுகளின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி. பரவலாக நீதிக்கட்சி (Justice Party / ஜஸ்டிஸ் கட்சி) என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation / சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேசன்) அப்போதைய சென்னை மாகாணத்தில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும்.

இது 1916ம் ஆண்டு டாக்டர் டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. சென்னை மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்த பிராமணரல்லாதோர் ஒருங்கிணைப்பு மாநாடுகளின் விளைவாகவே இக்கட்சி உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த கட்சியானது சென்னை மாகாணத்தில் தேசியவாத இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சரியான அரசியல் மாற்றாகச் செயல்பட்டது. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் நடந்த தேர்தலில் வென்று 13 ஆண்டுகள் பதவியில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியடைந்தது. அதன்பின்னர் வெகுகாலம் இத்தோல்வியிலிருந்து அக்கட்சியினால்  மீளமுடியவில்லை.

பின்னர் 1938 இல் பெரியார் ஈ. வே. ராமசாமி நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 1944ல் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக பெயர் மாற்றிய ஈ. வே. ராமசாமி,  தேர்தல் அரசியலில் ஈடுபடுவதிலிருந்து விலகிக் கொண்டார். 

துவக்கத்தில் மொழி, இன உரிமைகள், சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு ஆகிய நோக்கங்களுடன் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பெரியாரின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்தவர் அறிஞர் அண்ணா. அவரை ஒட்டி திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர் கருணாநிதி. அவர் தொடர்ந்து பல்வேறு பரப்புரை பயணங்களை தமிழகம் முழுவதும் மேற்கொண்டார். இயக்கத்தை வலுப்படுத்தினார்.

பின்னர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணா 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியினை உருவாக்குகிறார். அவருடன் கருணாநிதியும் சேர்ந்து வெளியேறி அண்ணாவின் கரத்தினை வலுப்படுத்தினார். அநேகமாக தாய்க் கழகமாகிய திராவிடர் கழகத்தின் கொள்கைகளையே திமுகவும் கொண்டிருந்தது எனலாம். அத்துடன் திராவிட நாடு என்னும் கருத்தாக்கம், பின்னர் மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளை திமுக வலுவாக முன்னெடுத்தது.

தங்களது கொள்கைகளை பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு   மொழி, கலை, நாடகம், இலக்கியம், திரைப்படம் என அனைத்துத் துறைகளிலும் பண்பாட்டுப் புரட்சிக்கு திமுகவின் தலைவர்கள் விதித்ததை யாரும் மறுக்க முடியாது எனலாம்.

அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, பெரியார் மற்றும் அண்ணா இருவரும் அதுவரை, பரப்பி வந்த கொள்கைகள் அனைத்துக்கும் செயல் வடிவம் கொடுப்பதில் தீவிரமாக செயல்பட்டார். அண்ணா காலத்திலேயே திமுகவில் இணைந்து விட்ட நடிகர் எம்.ஜி.ஆர், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் கட்சியைத் துவக்கினார்.

பெயரில் அண்ணா மற்றும் திராவிடம் ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் தீவிரமாக திராவிட கொள்கைகளை பின்பற்றியவர் என்றோ, அல்லது நடைமுறைக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியவர் என்றோ கூற முடியாது. குறிப்பாக கடவுள் மறுப்பு மற்றும் பகுத்தறிவுக்கு கொள்கைகள் அநேகமாக அப்பொழுது  அங்கிருந்து விடை பெற்றுக் கொண்டு விட்டன என்றே கூறலாம்.

அவரோடு பயணம் செய்து பின்னர் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவும் தனது வழிகாட்டியான எம்.ஜி.ஆரையே பின்பற்றினார். எனவே இவர்கள் இருவரையும் நம்மால் வலுவான திராவிட இயக்கத் தொடரியாக கருத இயலாது.  

அதேசமயம் அண்ணா தொடங்கிய சமூக நலத் திட்டங்களை ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞரும், மும்முறை முதல்வராயிருந்த எம்ஜி.இராமச்சந்திரனும், ஐந்து முறை முதல்வராயிருந்த ஜெயலலிதாவும் மென்மேலும் வலிமைப்படுத்தினர் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டாக வேண்டும்.

அண்ணா விரும்பிய மாநில சுயாட்சிக் கொள்கைகள் இன்று இந்திய அரசியலில் முதன்மையாகக் கருதப்படுவதற்கு வலிமையான திராவிட இயக்க சிந்தனைத் தாக்கமுள்ள ஆட்சிதான் காரணம் என்றும் கூறலாம்.

மீண்டும் திமுகவின் அரசியல் பயணத்திற்கு வரலாம். 1993-ல் கட்சியில் இருந்து விலகிய வைகோ தனியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்னும் கட்சியைத் துவக்கினார். ஆனாலும் தேர்தல் அரசியல் களத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வெற்றிகளை ஈட்டவோ, அதன் மூலம் செயல்பாடுகளை முன்னெடுக்கவோ அவருக்கு வாய்ப்பு வரவில்லை. இருந்த போதிலும் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரிடம் அரசியல் பயின்றவர் என்பதால், வைகோவை முழுமையாக திராவிட சிந்தனைகளிலிருந்து விடுத்து பார்க்க இயலாது என்று கூறலாம்.      

எனவே தற்பொழுது கருணாநிதியின் மறைவானது திராவிட இயக்கத்தின் பயணத்தில் எத்தகைய விளைவை உருவாக்கவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. அவரது மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைமை பொறுப்பினை அநேகமாக ஸ்டாலின் ஏற்க உள்ளார் என்னும் பொழுது அவருக்கு முன்னுள்ள சவால்கள் வேறானவை.

கருணாநிதியிடம் இருந்த கொள்கைப் பிடிப்பு, தேர்தல் அரசியலிலிருந்தாலும் அடிப்படைக் கொள்கைகளில் சமரசமற்ற போக்கு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தன்மை காலத்திற்கேற்ற படி தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட ஒரு தலைவரை இனி பார்ப்பது இயலாத ஒன்றுதான் என்று தோன்றுகிறது.

அதே சமயம் கொள்கை சார்ந்த சவால்கள் தவிர ஸ்டாலின் முன்பாக வேறுசில விஷயங்களும் இருக்கின்றன. உட்கட்சியில் உருவாக கூடிய பதவிப் போட்டிகள், கட்சி மற்றும் ஆட்சி இடையேயான அதிகார பகிர்வு, புதிதாக உருவாகியிருக்க கூடிய, உருவாகவுள்ள கட்சிகள், கருணாநிதிக்கு என்று இருக்கக் கூடிய அந்த ஈர்க்கும் தன்மை காரணமாக உருவாக்கப்பட்ட கட்சிக்கு கட்டுக்கோப்பை தொடர்ச் செய்தல்,  அதன் விளைவாக வர வாய்ப்புள்ள சீனியர் மற்றும் இளையவர்கள் குறித்தான பிரச்னைகள் என இன்னும் ஏராளம் இருக்கின்றன.     

இந்த நிலையில் தமிழகத்தில் நூற்றாண்டுகளைக் கடந்து நடந்து வரும் திராவிட இயக்கமானது இனி எதிர்கொள்ள உள்ள சாலையில் பயணம் பெரும் சவால்கள் உள்ளதாக இருக்கும் என்றே  கருதலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT