தமிழ்நாடு

மறைவுக்குப் பிறகும் போராடி வெற்றி: மு.க.ஸ்டாலின் கண்ணீர்

DIN

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கேள்விப்பட்ட அந்தக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
ஆரவாரக் குரல்: மெரீனா கடற்கரையில் துயில்வதற்காக மறைவுக்குப் பிறகும் கருணாநிதி போராடி வெற்றி பெற்றதாக திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் ஆரவாரக் குரல் எழுப்பினர்.
காவேரி மருத்துவமனையில் 11 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார். 
அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தபோதே மெரீனாவில் அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் மூத்த 
உறுப்பினர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்று இது தொடர்பான கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. சட்டச் சிக்கல் உள்ளதாகக் கூறி மெரீனாவில் இடமளிக்க தமிழக அரசு மறுத்தது. இதனையடுத்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்ற வழக்கின் வாதத்தின் தீர்ப்பு, புதன்கிழமை காலை 11 மணியளவில் வெளியானது. கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனா கடற்கரையில் இடம் ஒதுக்க உத்தரவிட்டு தீர்ப்பு வெளியானது.
கட்டிப் பிடித்து கண் கலங்கிய குடும்பத்தினர்...: கருணாநிதி உடலின் அருகில் நின்றுகொண்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு செல்லிடப்பேசி மூலம் தீர்ப்பின் விவரம் தெரிவிக்கப்பட்டது. சாதகமான தீர்ப்பு வெளியானதை அருகில் நின்று கொண்டிருந்த கனிமொழியின் மகன் ஆதித்யாவிடம் தெரிவித்தார். இருவரும் கட்டிப் பிடித்து கண் கலங்கினர்.
ஸ்டாலினைத் தேற்றிய கனிமொழி: தீர்ப்பு விவரத்தை அறிந்த உடன் மு.க.ஸ்டாலின் தொண்டர்களைப் பார்த்து கை கூப்பி வணங்கியவர், நெகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார். அருகில் இருந்த துரைமுருகன், ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகிய கட்சியின் மூத்தத் தலைவர்கள் கலங்கிய கண்களுடன் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். கனிமொழியும் அவர் அருகில் வந்து ஸ்டாலினைத் தேற்றினார்.
ராஜாஜி ஹாலில் திரண்டிருந்த தொண்டர்களுக்கும் தீர்ப்பு குறித்த விவரம் அறிவிக்கப்பட்டது. இதனால், அங்கிருந்த தொண்டர்கள், வாழ்க வாழ்க வாழ்கவே' என்று கோஷமிட்டு தீர்ப்பை வரவேற்றனர்.
அப்போது தொண்டர்களிடம் பேசிய திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், உயிரோடு இருந்தபோது மட்டுமல்ல; இறந்த பிறகும் கருணாநிதி போராடி வெற்றிபெற்றுள்ளார்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அப்போது தொண்டர்கள் பெருத்த குரல் கொடுத்தனர்.
சோகத்திலும் மகிழ்ச்சி: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான நிலையில் சோகத்திலும் தொண்டர்கள் , தலைவர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT