தமிழ்நாடு

2019- இல்கூட உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: உயர் நீதிமன்றம் கருத்து

DIN


தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டுகூட உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தல் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் நடத்தப்படவில்லை; இதே நிலை நீடித்தால் உள்ளாட்சி தேர்தல் வரும் 2019-ஆம் ஆண்டில் கூட நடைபெறாது என கருத்து தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை கடந்த 2017- ஆம் ஆண்டு நவம்பர் 17- ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும், அது தொடர்பான அறிவிப்பாணையை 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் 18- ஆம் தேதிக்குள் வெளியிடவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறிய மாநிலத் தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெஃரோஸ்கான் மற்றும் மாநில தேர்தல் ஆணையச் செயலர் டி.எஸ்.ராஜசேகர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
தேர்தல் ஆணையம் விளக்கம்: இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கூறியதாவது: வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்படும். அந்தப் பரிந்துரைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட முடியும். வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளாட்சித் தேர்தலை ஒருபோதும் நடத்த முடியாது. மேலும், கடந்த 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த வழிவகை செய்யும் சட்டப் பிரிவை தமிழக அரசு ரத்து செய்து விட்டதால், தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளன' என்றார் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன்.
தமிழக அரசு விளக்கம்: தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம் கூறியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள எந்த வார்டுகளும் முறையாக இல்லை. எனவே, மறுவரையறை செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என திமுகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வார்டு மறுவரையறை பணிகளை முடித்து, இட ஒதுக்கீடு முறை வழங்கப்பட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியும். எனவே, அதற்கான கால அவகாசத்தை வழங்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.
திமுக சார்பில் இன்று வாதம்: அப்போது திமுக தரப்பு வாதங்களை முன் வைக்க மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் அனுமதி கோரினார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே போதுமான கால அவகாசம் கொடுத்தாகி விட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தல், இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் நடத்தப்படவில்லை. இதே நிலை நீடித்தால் வரும் 2019-ஆம் ஆண்டுக்குள்கூட உள்ளாட்சித் தேர்தல் நடக்காது போல் உள்ளது'' என்று தெரிவித்தனர். மேலும், 
இந்த வழக்கில் திமுக தரப்பு வாதங்களை செவ்வாய்க்கிழமையன்று முன் வைக்க அனுமதி அளித்து விசாரணையை ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT