தமிழ்நாடு

பிரியாவிடை: வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர், ஆளுநர், மு.க. ஸ்டாலின் அஞ்சலி

DIN


பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் பூத உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆகியோர் நேரில் மலரஞ்சலி செலுத்தினர்.
தில்லி கிருஷ்ண மேனன் மார்க் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை காலை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 


இதேபோன்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை இரவு தில்லி வந்தார். அவருடன் மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் வந்தனர். இரவு சுமார் 1.30 மணியளவில் மலரஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 
பின்னர் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சில ஆண்டுகளாக உடல் நலிவுற்றிருந்த நிலையில் வியாழக்கிழமை காலமாகி இருக்கிறார். அவரது மறைவு என்பது இந்திய தேசத்திற்கு ஒரு மாபெரும் இழப்பாகும். அவர் ஒரு மாபெரும் தலைவராக, இந்திய நாட்டின் பிரதமராக இருந்து உலக அளவில் பாராட்டப்படும் அளவுக்கு தனது கடமையை, பணியைத் திறம்பட ஆற்றியவர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இந்தியா முழுவதும் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியவர். அது பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கிற சாதனையாகவும் அது அமைந்திருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் ஆட்சியைக் கலைக்க ஒரு சதித் திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது, தனது ஆட்சியே போனாலும் கவலைப்படாமல் அரசியல் சட்டத்தைப் பேணிப் பாதுகாத்து ஆட்சியைக் கலைக்க ஒப்புதல் தராமல் தனது கடைமைய நிறைவேற்றியவர் வாஜ்பாய். அவர் தலைவர் கருணாநிதியிடம் நெருங்கிய நட்புக் கொண்டு, நெருங்கிய நண்பராக விளங்கியவர். அப்படிப்பட்ட மாபெரும் தலைவரின் இழப்பு மிகப் பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், பாஜகவினருக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

நாட்டுக்குப் பேரிழப்பு - முதல்வர்
மலரஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜகவின் மூத்த தலைவரான வாஜ்பாய் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறந்த முறையில் பணியாற்றிவர். பாஜகவின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். 
பாஜக வெற்றி பெற்று முதல் முறையாக பாஜகவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 
வாஜ்பாயின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும். மிகச் சிறந்த இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர், பொது மக்களிடத்தில் அன்பாகப் பழகக் கூடியவர். நிர்வாகத் திறமைமிக்கவர். 
அப்படிப்பட்ட தேசப்பற்றுள்ள அவரது மறைவு இந்திய தேசத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பாகும். 
அவரைப் பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு சார்பாகவும், இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
 

வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதாவை வியாழக்கிழமை நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க. ஸ்டாலின், தயாநிதி மாறன், மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT