முகப்பு
தமிழ்நாடு

ஆன்லைனில் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்துக்கு.. எஸ்இடிசியின் கலக்கல் திட்டம்

விரைவுப் பேருந்தில் பயணிக்க எஸ்இடிசி இணையதளத்தில் டிக்கெட் முன் பதிவு செய்யும் பயணிகளின் செல்போனுக்கு, பேருந்து நடத்துநரின் செல்போன் எண் எஸ்எம்எஸில் அனுப்பப்படும்.

Updated On : 22 ஆகஸ்ட், 2018 at 2:43 PM
பகிர்:


சென்னை: விரைவுப் பேருந்தில் பயணிக்க எஸ்இடிசி இணையதளத்தில் டிக்கெட் முன் பதிவு செய்யும் பயணிகளின் செல்போனுக்கு, பேருந்து நடத்துநரின் செல்போன் எண் எஸ்எம்எஸில் அனுப்பப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த புதிய சேவை கடந்த ஞாயிறன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆன்லைனில் டிக்கெட் எடுத்தவர்கள், கடைசி நேரத்தில் பேருந்தைப் பிடிக்க ஓடுவது தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தமிழகம் முழுவதும் சராசரியாக ஒரு பேருந்தில் 2 பயணிகள், தாங்கள் முன்பதிவு செய்த இடங்களில் பேருந்தில் ஏற முடியாமல் போகிறது என்கிறது புள்ளி விவரம். வார இறுதி மற்றும் விழாக் காலங்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பது வழக்கம்.

இதனைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு பேருந்தையும் இயக்கப்போகும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டதும், அந்த பேருந்தில் பயணிக்க முன்பதிவு செய்திருக்கும் பயணிகளின் செல்போன்களுக்கு நடத்துநரின் செல்போன் எண் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இதன் மூலம் ஒரு பயணி தவிர்க்க முடியாத காரணத்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து பேருந்தில் ஏற முடியாவிட்டால், அந்த பேருந்தின் நடத்துநருக்கு போன் செய்து மாற்று இடத்தில் பேருந்தில் ஏறிக் கொள்ளவோ அல்லது தான் பேருந்து நிலையத்துக்கு வரும் நேரத்தையோ தெரிவிக்க முடியும்.

ஆன்லைனில் பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக எஸ்இடிசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, வரவேற்பைப் பொறுத்து விரிவுபடுத்தப்பட உள்ளது.

இது பற்றி மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறுகையில், அதிகக் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த சேவை நிச்சயம் பயனளிக்கும். இதன் மூலம் பேருந்தில் தவறவிடும் பொருட்களை திரும்பப் பெறவும் இந்த செல்போன் எண்கள் பயன்படும் என்கிறார்.

எஸ்இடிசியின் விரைவுப் பேருந்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் தங்களது டிக்கெட்டுகளை www.tnstc.in இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.