தமிழ்நாடு

மழை வெள்ளத்தில் இருந்து மகிழ்ச்சி வெள்ளத்துக்கு திரும்பட்டும்: ஓணம் பண்டிகைக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து

DNS

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: வரலாறு காணாத கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு தமிழக மக்களின் சார்பாக தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி அளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பால் பவுடர், ஆடைகள், போர்வைகள், மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன.
 
சகோதர உணர்வுமிக்க தமிழக மக்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் பெறப்பட்டு கேரள மாநிலத்துக்குத் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்கள் அந்தப் பாதிப்பில் இருந்து மீண்டெழுந்து விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிட தமிழக மக்கள் சார்பில் இறைவனை வேண்டுகிறேன்.

மு.க.ஸ்டாலின் (திமுக): ஓணம் திருநாளில் வழக்கமாகப் பொங்கும் மகிழ்ச்சி வெள்ளத்துக்குப் பதிலாக, இந்த ஆண்டு கடும் மழை, வெள்ள பாதிப்புகளால் துயருற்றிருக்கும் கேரள மாநில மக்களுக்கு அனைவரும் ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்டுவதே ஓணம் வாழ்த்துகளாக அமையும். இயற்கைச் சீற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு, அனைவரும் துணை நின்று, ஓணம் திருநாளைச் சிறப்பிக்க வேண்டும்.

சு.திருநாவுக்கரசா் (காங்கிரஸ்): இயற்கையின் சீற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு, இந்த ஆண்டு துயரத்துடனே ஓணம் பண்டிகையை வரவேற்க வேண்டிய நிலை கேரள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இயற்கையால் பாதிக்கப்பட்டாலும், அயராது உழைக்கும் கேரள மக்கள், பீனிக்ஸ் பறவை போல் அடுத்த ஆண்டு ஓணம் திருநாள் வருவதற்குள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிட வாழ்த்துகள்.

ராமதாஸ், அன்புமணி (பாமக): கேரளம் மிகப் பெரிய இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு, அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் தான் ஓணம் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இத்திருநாள் மக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்து, இழந்தவற்றை மீட்டெடுக்கவும், மகிழ்ச்சி நிறைந்த புதுவாழ்வை உருவாக்கிக் கொள்ளவும் வழி கோல வேண்டும். இந்த நன்னாளில் அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும், அநீதிக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடவும் அனைத்துத் தரப்பு மக்களும் சபதம் ஏற்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதித்த மக்கள் அனுபவித்த துன்பங்கள், சிரமங்கள் நீங்கி, மீண்டும் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிட இறைவனும், இயற்கையும் துணை நிற்க வேண்டி, உலகம் முழுவதும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT