தமிழ்நாடு

தூத்துக்குடியில் தினமணி சார்பில் மகாகவி பாரதியார் விழா

DIN


தூத்துக்குடியில் தினமணி சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது.
தூத்துக்குடி ஏ.வி.எம். கமலவேல் அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தலைமை வகித்து தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியது: பாரதி அன்பர்கள் ஒன்றுகூடி பாரதிக்கு ஒரு விழா எடுக்கிறோம். பாரதியின் பிறந்த நாளில் கவிஞர்களுக்கு இடமில்லை என்று கூறினால் அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். அதனால்தான் அவர் பிறந்த மண்ணில் காலையில் ஒன்று கூடி பாரதிக்கு புகழ் அஞ்சலி செலுத்திவிட்டு மாலையில் கவிஞர்கள் இங்கு கூடியிருக்கிறார்கள்.
இப்படி ஒரு கவியரங்கம் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் எனக்கு முதன்முதலில் நினைவுக்கு வந்தவர் யுகபாரதிதான். தனது பெயரிலேயே பாரதியை இணைத்துக் கொண்டுள்ள அவர், எனக்கு தந்த ஊக்கம்தான் இந்த நிகழ்ச்சி நடத்த உறுதுணையாக இருந்தது. அவர் கவியரங்கம் என்று கூறாமல் புதிய பாணியில் கவிதை வாசிப்பு என்று கூறலாமே என்றார் அதுவும் சரியாகத்தானிருந்தது.
பாரதியை போல் பின்னால் வந்த பல கவிஞர்கள் குறித்து ஆவணப்படுத்தாமல் விட்டுவிட்டோம். இனிமேல் அந்த தவறு நிகழக்கூடாது என்பதற்காகவும், அந்தக் குறையை நீக்கும் வகையிலும் பாரதி குறித்து ஆவணப்படுத்தியுள்ள கவிஞர் ரவிசுப்பிரமணியம் பாராட்டுக்குரியவர்.
கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே இருந்தால் போதாது என்று கருதி ஒரு பெண் கவிதாயினி வேண்டும் அதுவும் புதிய கவிஞராக இருக்க வேண்டும் என்று எனது நண்பர் சேதுபதியிடம் கூறியபோது அவர் அறிமுகப்படுத்திய கவிதாயினிதான் கவிஞர் பாரதி பத்மாவதி. கிருங்கை சேதுபதி, எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் பழகியவர்.
எங்கெல்லாம் ராம காதை கேட்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயர் இருப்பார் என்று கூறுவார்கள். அதேபோல்தான் எங்கெல்லாம் கவிதை கேட்கிறதோ அங்கெல்லாம் பாரதி அமர்ந்திருப்பார் என்றார் அவர்.
நல்லி குப்புசாமி செட்டியார்: 2000இல் வெளிவந்த பாரதி திரைப்படத்தை சென்சார் செய்யும் வாய்ப்பு ஒரு நண்பர் மூலமாக எனக்குக் கிடைத்தது. அதற்கு முன்னர் 1989இல் இயக்குநர் ரகுநாதன் என்பவர் இயக்கிய ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. இது நியூஜெர்சியில் இருந்து எடுத்துள்ளனர். நான் அந்த இயக்குநரை பார்த்து கேட்டபோது, அவர் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் என்பதை அறிந்தேன். பாரதியைப் பற்றி தெரிந்த ஒருவரால்தான் அவ்வாறு சிறப்பாக எடுக்க முடிந்தது என்றார் அவர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: கடந்த வாரம் நெகிழியை தடை செய்வது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நெகிழியை தடை செய்து ஓர் உத்தரவு பிறப்பித்தோம். அதற்கு முதல் ஆவணமாக அமைந்தது தினமணியின் நெகிழி அபாயம் என்கிற தலையங்கம்தான். இப்போது தினமணியின் தலையங்கம் நீதிமன்ற வழக்குகளுக்கு அவசியமான ஆவணமாக இருக்கிறது. நெகிழிக்கு தடை விதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளதா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், தினமணியின் தலையங்கத்தைப் படித்ததும் தடை உத்தரவு போடும் துணிச்சல் வந்தது என்றார் அவர்.
கவியரங்கம்: பின்னர் நடைபெற்ற கவியரங்கத்தில் கவிஞர்கள் யுகபாரதி, அமுதபாரதி, பாரதி பத்மாவதி, கிருங்கை சேதுபதி, ரவி சுப்பிரமணியம் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
சொல்லரங்கம்: தொடர்ந்து, சொல்லரங்கம் நிகழ்ச்சியில் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கவி உள்ளம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நாட்டிய நிகழ்ச்சி: இறுதியில் ஜாகீர் உசேன் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அக்குழுவினருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT