தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோயிலில் யார் கோரினாலும் பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பீர்களா?: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

DIN

தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நிகழ்ச்சிக்கு யார் கோரினாலும் அனுமதி அளிப்பீர்களா?  என தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர், கடந்த வாரம் தஞ்சை பெரிய கோயிலில் யோகா மற்றும் தியான நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக கோயில் வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்கக் கோரி வழக்குரைஞர் முத்துக்கிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள், நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர்.  மேலும் இதுகுறித்து தொல்லியல் துறை பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை மனு விசாரிக்கப்பட்டது. 
அப்போது,  தொல்லியல் துறை கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணி, கோயில் இணை ஆணையர் பரணிதரன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.  
அப்போது, தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சி நடத்த வாழும் கலை அமைப்பினருக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கவில்லை. அவர்கள் கோயிலில் பஜனை நிகழ்ச்சி நடத்த மட்டுமே அனுமதி கோரியிருந்தனர். அதற்கு மட்டுமே அனுமதி வழங்கினோம். கொட்டகை அமைக்கவோ, வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு செய்யவோ எந்தவொரு அனுமதியும் வழங்கவில்லை என்றனர். நிகழ்ச்சிக்கு வழங்கிய  அனுமதி தொடர்பான ஆவணங்களை கோயில் இணை ஆணையர் பரணிதரன் சமர்ப்பித்தார்.
இதையடுத்து,  தஞ்சை பெரிய கோயிலின் பழைமையை பாதுகாக்கவே நீதிமன்றம் இதில் தலையிடுகிறது. தஞ்சை பெரிய கோயிலில் பஜனை நடத்த யார் அனுமதி கோரினாலும் அளிப்பீர்களா, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கோயில் உள்ளபோது, இந்து சமய அறநிலையத் துறை பரிந்துரையின்பேரில் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், எதன் அடிப்படையில் பந்தல்அமைக்க அனுமதி அளித்தீர்கள் என நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.  தொடர்ந்து, தனியார் நிகழ்ச்சிக்கு கோயிலில் அனுமதி அளிப்பது தொடர்பாக தொல்லியல் துறை மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கு விசாரணையை டிச. 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT