தமிழ்நாடு

சிவகாசி அரசு மருத்துவமனையில் ஐவர் குழு ஆய்வு

DIN


சிவகாசி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஐவர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ஹெச்ஐவி கிருமி ரத்தம் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்டதாகும். இதையடுத்து அந்த கர்ப்பிணிக்கும் ஹெச்ஐவி கிருமி தொற்று ஏற்பட்டு, அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 9 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த சுகாதார மற்றும் ஊரக கூடுதல் இயக்குநர் எஸ்.மாதவி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினரை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நியமித்தார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை சிவகாசி அரசு மருத்துவமனையில் இக்குழுவினர் ஆய்வு நடத்தினர். சுகாதாரம் மற்றும் ஊரக கூடுதல் இயக்குநர் எஸ்.மாதவி தலைமையில் மருத்துவர்கள் ரகுநந்தன், மணிமாலா, யூப்ரசியலதா, சுவாததிரன் ஹம்சவர்த்தினி ஆகிய 5 பேர், மருத்துவமனைக்கு காலை 9.30 மணிக்கு வந்தனர். இவர்கள் இங்குள்ள நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவில் முதல் தளத்தில் உள்ள மருத்துவர்கள் ஓய்வு அறையில் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள், சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் சைலேஷ்குமார், செவிலியர்கள் அஜிதா, கலாவதி, பாக்கியலட்சுமி தற்போது பணியில் உள்ள ரத்த வங்கி லேப் டெக்னீஷியன் முருகன், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள கணேஷ்பாபு உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள வளர்மதி உள்ளிட்ட இருவர் விசாரணைக்கு வரவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் இக்குழுவினர் மாலை 4.20 மணிக்கு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அவர்கள் பணியிலிருந்த மருத்துவரிடம், பிரசவ விவரம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் வெளியே வந்த சுகாதாரம் மற்றும் ஊரக கூடுதல் இயக்குநர் மாதவி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழுமையடைந்த பின்னர்தான் கூற இயலும் என்றார்.
இதற்கிடையே பிற்பகல் தேசிய மருந்து கட்டுப்பாட்டுத்துறையிருந்து வந்த 3 பேர், தலைமை மருத்துவர் அறையில் கோப்புகளை ஆய்வு செய்தனர்.

சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆய்வாளர்கள் விசாரணை
கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றிய விவகாரத்தில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆய்வாளர்கள் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மருத்துவர் காசி தலைமையில் வந்த தேசிய மருந்து கட்டுப்பாட்டுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, சாத்தூர்அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அய்யனார் மற்றும் ரத்த வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மருந்தக அலுவலர்களிடமும் அவர்கள் விசாரித்தனர். வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்திய பின்னர், பிரதான சாலையில் உள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியிலும் விசாரணை நடத்தியதுடன் அங்கும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

SCROLL FOR NEXT