தமிழ்நாடு

சட்டம் இருந்தும் முடிவுக்கு வராத கொத்தடிமை தொழிலாளர் முறை!

கடந்த 41 ஆண்டுகளாக கொத்தடிமை மீட்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் நடைமுறையிலிருந்தும், காலத்துக்கேற்ப இச்சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படாததால், கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாத

ஆ. நங்கையார் மணி

கடந்த 41 ஆண்டுகளாக கொத்தடிமை மீட்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் நடைமுறையிலிருந்தும், காலத்துக்கேற்ப இச்சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படாததால், கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாத நிலை தொடர்கிறது. 

தமிழகத்தில் 2,946 பஞ்சாலை மற்றும் பின்னலாடை தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் 3.6 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 5.5 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பஞ்சாலை மற்றும் பின்னலாடை சார்ந்து சுமார் 7,500 தொழிற்சாலைகள் சிறிய அளவில் செயல்பட்டு வருகின்றன. 
கட்டுமானம், தங்கும் விடுதி, உணவகம் உள்ளிட்ட இந்த சார்பு தொழில்களின் மூலம் 2.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர். இந்திய பஞ்சாலை மற்றும் பின்னலாடை துறையின் மொத்த உற்பத்தியில் தமிழகம் 65 சதவீதம் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், தமிழகத்தில் உள்ள பஞ்சாலை மற்றும் பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் சுமார் 1.8 லட்சம் பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், ஆடு மேய்த்தல், முறுக்கு சுடுதல் போன்ற பணிகளுக்காக பிற மாநிலங்களுக்கு சிறுவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் கிளிஞ்சல் பொறுக்குதல், கரும்புத் தோட்டம், கரி சூளை, கொலுசு பட்டறை உள்ளிட்ட 11 தொழிற்சாலைகளில் சுமார் 4 லட்சம் பேர் கொத்தடிமைகளாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

குடும்பத்தினர் பெற்ற கடனுக்காகவும், முன்பணமாக பெற்றக் கடனுக்காகவும் உரிமைகளை இழந்து, கொத்தடிமைகளாக தவிப்பவர்களின் வாழ்வு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. 

கொத்தடிமைகளை மீட்பதற்காகவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும், கொத்தடிமை மீட்பு மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 1976ஆம் ஆண்டு பிப்ரவரி 9 -ஆம் தேதி இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 41ஆண்டுகள் முடிந்தபோதிலும், அந்த சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது, ஆண்டுதோறும் அதிகரித்து வரும் கொத்தடிமைகளின் எண்ணிக்கையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2015, 2016, 2017 ஆகிய 3 ஆண்டுகளில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 2,300 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். பஞ்சாலை மற்றும் பின்னாலடை தொழிற்சாலைகளில் உள்ள கொத்தடிமை தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவதாக 22 தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. அதில், 9 தொண்டு நிறுவனங்கள் மட்டுமே தீவிர செயல்பாட்டுடன் இயங்கி வருகின்றன. கொத்தடிமை மீட்பு முயற்சியில் முழுமையாக வெற்றி பெறுவதற்கு, 41 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் ஆலோசகர் ச. ஜேம்ஸ் விக்டர் கூறியதாவது: 

வேலைக்கான முன்பணம் வழங்கினாலும், அரசின் குறைந்தபட்ச கூலியை விட குறைவாக வழங்கினாலும், வேலையிலிருந்து விடுவித்துக் கொள்ளவதற்கான சுதந்திரம் இல்லாததும், பெற்றக் கடனுக்காக வேலை செய்வதும் கொத்தடிமை. பிற தொழில்களுக்கு வழங்கப்படும் முன் பணம், பஞ்சாலை மற்றும் பின்னலாடை தொழிற்சாலைகளில் மட்டும் குறிப்பிட்ட ஒப்பந்த ஆண்டுகளுக்கு பின்பு வழங்கப்படுகிறது. இதனால், கொத்தடிமை சட்டத்தின்கீழ் பஞ்சாலை மற்றும் பின்னலாடை தொழிலாளர்களை வகைப்படுத்த முடியாத நிலை உள்ளது. 

முன்பணத்தை எந்தநிலையில் வழங்கினாலும், கொத்தடிமை சட்டத்தின்கீழ் வகைப்படுத்துவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். அதன் மூலமே, பஞ்சாலை மற்றும் பின்னலாடை தொழிலில் கொத்தடிமை முறையை முழுமையாக ஒழிக்க முடியும் என்றார் அவர். 

மாவட்டத்துக்கு ரூ.10 லட்சம் நிதி

சர்வதேச நீதி குழுமத்தின்(இன்டர்நேஷன் ஜஸ்டிஸ் மிஷன்) சமூக தொடர்பு மேலாளர் எஸ். கிளமென்ட் டேவிட் கூறியது: 

கடந்த 15 ஆண்டுகளாக சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொத்தடிமை முறையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டெடுக்கும் பணியில், அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். 15 ஆண்டுகளில் இதுவரை மீட்கப்பட்ட 5ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, தமிழக அரசு மூலம் கொத்தடிமை முறையை ஒழிக்க கடந்த டிசம்பர் மாதம் முதல் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பதற்காக மாவட்டத்துக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT