குஷ்பு கார் மீது முட்டை வீசிய வழக்கு: பிப். 12-க்கு ஒத்திவைப்பு
நடிகை குஷ்பு கார் மீது முட்டை, தக்காளி வீசப்பட்ட வழக்கின் விசாரணை இந்த மாதம் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நடிகை குஷ்பு கார் மீது முட்டை, தக்காளி வீசப்பட்ட வழக்கின் விசாரணை இந்த மாதம் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ் பெண்களின் கற்பு குறித்து திரைப்பட நடிகை குஷ்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கூறிய கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில், குஷ்பு மீது மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 2-இல் மேட்டூரில் பாமக வழக்குரைஞர் அ.முருகன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் குஷ்புவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் 2015 நவம்பர் 16-ஆம் தேதி மேட்டூர் நீதிமன்றத்தில் சரணடைந்து, பிடிவாரண்டை ரத்து செய்தார். பின்னர் அவர் திரும்பியபோது, கார் மீது தக்காளி, முட்டை ஆகியவை வீசப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீஸார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திங்கள்கிழமை நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1-இல் விசாரணைக்கு வந்தது. நீதித்துறை நடுவர் ராஜா வழக்கு விசாரணையை இந்த மாதம் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.