தமிழ்நாடு

வனப்பகுதியில் கல்குவாரிகள்: ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தடை

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் காமன்தொட்டி பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரிய நடவடிக்கையைத் தொடரலாம். ஆனால் அதை இறுதி செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த ஜெயசங்கர் அப்பையா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சூளகிரி அடர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி சானமாவு, தொரப்பள்ளி, காமன்தொட்டி வன கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகிறது. இதுவரை 1100 முதல் 1200 சம்பவங்கள் நடந்துள்ளதாக வனத்துறையே கணக்கிட்டுள்ளது. யானை தாக்கி 7 பேர் இறந்துள்ளனர். சமீபத்தில் கூட ஒற்றை யானை ஊருக்குள் புகுந்து தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காமன்தொட்டி பகுதியில் தற்போது கருங்கல் குவாரி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. யானைகள் வாழ்விடத்துக்கு அருகில் கல்குவாரி அமைப்பதன் மூலம் யானைகளுக்கு இடையூறு ஏற்படும். மேலும் யானைகள் சுலபமாக ஊருக்குள் வந்து விளைநிலங்களைச் சேதப்படுத்த வழித்தடம் அமைந்துவிடும்.
பாறைகளை உடைக்க வைக்கப்படும் வெடிகளால் மிரண்டும் போகும் யானைகளுக்கு மனிதர்களைத் தாக்கும் எண்ணம் அதிகமாகும். எனவே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கல்குவாரி அமைப்பதற்காக கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அதிகாரி ஆகியோர் வரும் 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். அதுவரை ஒப்பந்தப்புள்ளிகள் கோரியது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் ஒப்பந்தப் புள்ளியை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT