வாடகை பாக்கியை 4 வாரங்களில் வசூலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்
கோயில் நிலங்கள், கட்டடங்களுக்கான வாடகை மற்றும் குத்தகைத் தொகை பாக்கியை நான்கு வாரங்களுக்குள் வசூலிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோயில் நிலங்கள், கட்டடங்களுக்கான வாடகை மற்றும் குத்தகைத் தொகை பாக்கியை நான்கு வாரங்களுக்குள் வசூலிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சொத்துகளின் மதிப்பை சந்தை விலையின் அடிப்படையில் நிர்ணயிக்க குழு அமைக்க வேண்டும் எனவும் இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முத்துசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள சங்கரநாராயணர் கோயிலுக்குச் சொந்தமான 17 ஏக்கர் 62 சென்ட் நிலத்தை குறைந்த வாடகைக்கு 14 பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. எனவே நிலத்தை மீட்டு ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடவேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில், "கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைப் பாதுகாப்பது உயர் நீதிமன்றத்தின் கடமையாகும். எதிர் மனுதாரர்களிடம் கோயில் நிலத்தை குத்தகைக்கு விட்டது தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லை. எனவே அவர்கள் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களாகத்தான் கருதப்படுவர். இந்து சமய அறநிலையத்துறை செயலாளரின் அனுமதியின்றி 5 ஆண்டுகளுக்கு மேல் ஒருவருக்கு கோயில் சொத்துகளை குத்தகைக்கு விட முடியாது.
அதனை மீறி குத்தகைக்குக் கொடுத்தால் அது சட்டவிரோதமானது. உரிய ஆவணங்கள் இல்லாததால் எதிர்மனுதாரர்களுக்கு கோயில் நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட நிலத்தை இந்துசமய அறநிலையத்துறை பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விட வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை முறையாக பராமரிக்கவும், அந்தச் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோயில் நலப்பணிகளுக்காகச் செலவிட வேண்டும். கடவுள் மீது கொண்ட பக்தி மற்றும் நம்பிக்கையின் காரணமாக கோயில்களுக்கு சொத்துகளை தானமாக எழுதி வைக்கின்றனர்.
கோயிலை பராமரிக்கவும், பாதுகாக்கும் நோக்கத்தில் இதுபோன்ற தானங்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள கோயில் சொத்துகளை முறையாக பராமரித்தால் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும்.
ஆனால் முன்னோர்கள் தானமாக கொடுத்த சொத்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் இந்த உத்தரவுகளைப்
பிறப்பிக்கிறேன். கோயில் சொத்துகளை வாடகைக்கு, குத்தகைக்கு எடுத்தவர்கள், வாடகை பாக்கி அல்லது குத்தகை பாக்கி வைத்திருந்தால் அதனை 4 வார காலத்துக்குள் செலுத்திவிட வேண்டும். இதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறை செய்திதாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும்.
அதன்பிறகும் வாடகை பாக்கியை செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து கோயில் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய சந்தை மதிப்பிலான வாடகை மற்றும் குத்தகைத் தொகையை நிர்ணயம் செய்ய இந்துசமய அறநிலையத்துறை குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிதாக நிர்ணயம் செய்யப்பட உள்ள வாடகை மற்றும் குத்தகையை தர தயாராக இருப்பவர்கள் சொத்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். புதிய வாடகையை ஏற்காதவர்களை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் சொத்துகளை குத்தகை மற்றும் வாடகைக்கு எடுத்தவர்கள், 3 ஆவது நபருக்கு அவர்கள் வழங்காமலிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை 3 ஆவது நபரின் பயன்பாட்டில் இருந்தால் அந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் தமிழகம் முழுவதும் 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விடப்பட்ட கோயில் சொத்துக்களின் விவரங்களை 6 வார காலத்துக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
குழு அமைக்க வேண்டும்: தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களை கணக்கெடுக்கவும், கோயில் சொத்துகள் யார் யார் கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். குத்தகை மற்றும் வாடகை பாக்கி வசூலித்தல் குறித்து கோயில் செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், இணை ஆணையர்கள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஒருவேளை இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்கள் மூலம் கிடைக்கிற வருவாயை இந்துசமய அறநிலையத்துறை கோயிலுக்குத்தான் செலவழிக்க வேண்டும்.
அதிக வருமானம் வரும் கோயில் வருமானத்தை குறைவான வருமானம் கொண்ட கோயிலின் பராமரிப்புக்குச் செலவிட வேண்டும். திவ்யபிரபந்தம், தேவாரம் ஆகியவற்றை பாராயணம் செய்யவும், ஆன்மீகப் படிப்புகளுக்குச் செலவு செய்ய வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் சிவகங்கை மாவட்டம் சூரக்குடி தேசிகநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முத்து செட்டியார் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி நிலத்தை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், கோயில் நிலம் விற்பனைச் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கவும், விற்பனை செய்யப்பட்டிருந்தால் அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதுதொடர்பான அறிக்கையையும் 6 வார காலத்துக்குள் தாக்கல் இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.