கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை தீர்ப்புக்காக வரும் 16- ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது.
கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை தீர்ப்புக்காக வரும் 16- ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், டென்னிஸ் விளையாட்டு தொடர்பாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து செல்ல அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. கார்த்திக் சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம், "இந்த வழக்கின் விசாரணைக்கு கார்த்திக் சிதம்பரம் முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறார். எனவே அவர் வெளிநாடுச் செல்ல அனுமதி வழங்க வேண்டும்' என்றார்.
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், "ஏதாவது அவசர தேவை அல்லது மருத்துவ தேவைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டால் அனுமதிக்கலாம். ஆனால் மனுதாரர் வர்த்தகம் தொடர்பான பணிக்காக செல்கிறார்.
மனுதாரரை அனுமதித்தால் வழக்கின் சாட்சிகளைக் கலைக்ககூடும். மேலும் லுக் அவுட் நோட்டீசின் செல்லுபடி காலம் முடிய மூன்று மாதங்களே உள்ளது' என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வெளிநாடு செல்ல அனுமதி கோரிய வழக்கை வரும் 16-ஆம் தேதிக்கு தீர்ப்புக்காக ஒத்திவைத்தனர். பிரதான வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, அந்த வழக்கின் விசாரணையை மார்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.