திருநள்ளாற்றில் நாட்டியாஞ்சலி :பத்மா சுப்ரமணியனுக்குப் பாராட்டு
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெறும் நாட்டியாஞ்சலியில், புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெறும் நாட்டியாஞ்சலியில், புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுத் தெரிவித்தார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு 13 -ஆம் ஆண்டாக, 6 நாள்கள் நடைபெறும் வகையில் கோயில் வளாகத்தில் உள்ள கெய்தான் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள் தொடங்கின.
ஒவ்வொரு நாளும் உலகின் பல நாடுகளிலும், இந்தியாவிலும் புகழ்பெற்று விளங்கும் நடனக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகின்றனர்.
3 -ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை புகழ்பெற்ற நடனக் கலைஞரும், கலைமாமணியுமான டாக்டர் பத்மா சுப்ரமணியன் நடனம் அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், பத்மாசுப்ரமணியனுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்ற நிர்வாகிகள் த. தங்கவேலு, டி. மோகன், பி. புஷ்பராஜ், சித்ரா கோபிநாத் ஆகியோர் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நடனக் கலைஞர்கள் பரதநாட்டியமாடினர். 4-ஆம் நாளான திங்கள்கிழமை குச்சிப்புடி உள்ளிட்ட நடனங்கள் அரங்கேறின.
மகா சிவராத்திரி நாளான செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 3.55 மணி வரை தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான 14 -ஆம் தேதி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பல்வேறு நடனக் குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.