லஞ்ச வழக்கில் நில அளவையருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை
லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் நில அளவையருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் நில அளவையருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
ஜயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகேயுள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி(43). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர், வாரியங்காவலில் உள்ள தனது மனைவி விஜயாவுக்குச் சொந்தமான நிலத்தை அளந்து தருமாறு, ஆர்.எஸ். மாத்தூர், படைவெட்டி குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவரும், குவாகம் பிர்க்கா நில அளவையருமான மணிமொழி (63) என்பவரை அணுகியுள்ளார். அதற்கு அவர் நிலத்தை அளக்க ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருணாநிதி, அரியலூர் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து கடந்த 17.8.2012 அன்று போலீஸார் அறிவுரையின்படி, ரசாயனம் தடவிய ரூ. 2,500-யை மணிமொழியிடம், கருணாநிதி கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸார் மணிமொழியை கையும்களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை, அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து மணிமொழி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.