தமிழ்நாடு

அப்துல்கலாம் வீட்டிலிருந்து கமல் அரசியல் பணியை தொடங்குவதை வரவேற்கிறேன்: நடிகர் விவேக் 

DIN

அப்துல்கலாம் வீட்டிலிருந்து கமல் அரசியல் பணியை தொடங்குவதை வரவேற்பதாக நடிகவர் விவேக் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் சேதுபதி மன்னர் நினைவு அறக்கட்டளை சார்பில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் விழா மன்னர் என்.குமரன் சேதுபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து நடிகர் விவேக் பேசியது:
சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு அவர் சர்வ மதத் தலைவர்கள் மாநாட்டில் பேசக் காரணமாக இருந்தவர் மன்னர் பாஸ்கர சேதுபதி. நரேந்திரராக இருந்த இளைஞர் சுவாமி விவேகானந்தராக பெயர் பெறவும், இந்தியாவின் பெருமைகளை உலகம் முழுவதும் தெரிவதற்கு காரணமாக இருந்தது ராமநாதபுரம் மண். தமிழை வளர்த்த மண், வீரம் காத்த மண்,தியாகங்கள் பல செய்த மண், அனுமான் நடந்த மண், சுவாமி விவேகானந்தர் நடந்து வந்த மண், விடுதலைப் போராட்டத்துக்காக முதலில் குரல் கொடுத்த மண்  என பல பெருமைகள் ராமநாதபுரத்துக்கு உண்டு. மிகச்சிறந்த புண்ணிய பூமியாக ராமநாதபுரம் இருந்துள்ளது. தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியது, வளர்த்தது, இயற்கையையும், நீர்நிலைகளையும் காத்தது மற்றும் விவசாயம் செழிப்புறவும் காரணமாக இருந்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.

இத்தகைய பல சிறப்புகள் உடைய ராமநாதபுரத்தை பள்ளிப் பாடப்புத்தகங்களில் பாடமாக்கப்பட வேண்டும். சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை சகோதரி நிவேதிதாவின் 150 ஆவது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே வேளையில் உலகம் முழுவதும் உள்ள அத்தனை இளைஞர்களுக்கும் விடிவெள்ளியாக திகழ்ந்த சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பிய ராமநாதபுரம் மன்னருக்கும் சிறப்பான விழா நடத்தப்பட வேண்டும். 

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் ஒரு கோடி மரங்கள் நட வேண்டும் என என்னை கேட்டுக் கொண்டார். இதுவரை 30 லட்சம் மரக்கன்றுகளை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நட்டுள்ளேன். இன்னும் 70 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும். மரக்கன்றுகள் குறைந்த விலையில் கிடைத்தாலும் அதைப் பாதுகாக்கத் தேவைப்படும் கம்பி வேலிகள் விலை அதிகமாக உள்ளதால் உடனடியாக கலாமின் கனவை நிறைவேற்ற முடியவில்லை. மரங்கள் நம் தாயை விட உயர்ந்தவை. ஒரு ஏக்கரில் நடப்பட்ட மரங்கள் 18 பேருக்கு வாழ்நாள் முழுவதும் சுவாசிக்க ஆக்சிஜனை தருகிறது. காற்றில் இருக்கும் 65 சதவிகித ஆக்சிஸன் தான் நம்மை வாழ வைக்கின்றன.

ரஜினியும், கமலும் எனக்கு மிகவும் பிடிக்கும். கமல் ராமேசுவரத்தில் அப்துல்கலாம் வீட்டிலிருந்து அரசியல் பணியை தொடங்குவதை வரவேற்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT