தமிழ்நாடு

இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தைக் கற்றுக் கொடுங்கள்: எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தல்

DIN

விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் அதை இளைய தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தினார்.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் பொருளியல் துறை சார்பில் 'நிலையான விவசாயத்தை நோக்கி இந்தியா' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் புதன்கிழமை (பிப்.14) நடைபெற்றது. இதில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கலந்துகொண்டு பேசியது:- விவசாயம், அது சார்ந்த தொழில்கள்தான் வருங்காலத்தில் அதிக வேலைவாய்ப்பையும், வருவாயையும் ஈட்டி தருவதாக இருக்கும். அதனால் விவசாயத்தில் அதிக கவனம், முதலீடுகளை செய்ய வேண்டும். இது ஒன்றுதான் உணவுப் பாதுகாப்புக்கும், வாழ்க்கைப் பாதுகாப்புக்கும் உதவும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈர்க்கும் வகையிலும் விவசாயம் இருக்க வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் எப்படி பயன்படுத்துவது என்பதை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 
ஊட்டச்சத்து பாதுகாப்பு: விவசாயத்தின் வளர்ச்சியை தீர்மானிப்பதில் பொருளாதார அம்சங்களுக்கு அடுத்தபடியாக பருவமழை, சந்தை ஆகிய இரண்டும் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன. அனைத்து பஞ்சாயத்துகளிலும் ஆண்கள், பெண்களுக்கு பயிற்சி அளித்து, பருவநிலை மாற்றத்தை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 
விவசாயிகளின் பொருளாதாரம் நிலைபெறுவதற்கு அவர்கள் நிலையான விவசாயத்தை மேற்கொள்ள வேண்டியது 
அவசியம். தொழிற்கூடங்களில் வேலையிழப்பு ஏற்படும் நிலையில், விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும். உணவுப் பாதுகாப்பு என்பதில் இருந்து 'அனைவருக்கும் ஊட்டச்சத்து' பாதுகாப்பு என்பதை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்காக சத்தான உணவுப் பொருள்களை பயிரிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 
வேளாண்மையின் வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் அளித்து அந்தத் துறை தொடர்பான கொள்கைகளையும், தொழில்நுட்பங்களையும் சிறந்த முறையில் மேம்படுத்த வேண்டும். 
கடலோரப் பகுதிகளில்...தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கடற்கரையோரப் பகுதிகளில் அதிக பரப்பு கொண்ட நிலங்கள் விவசாயத்துக்கு ஏற்றதாக உள்ளன. வருங்காலத்தில் அந்தப் பகுதிகளில் விவசாய நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும். ரஷியாவில் சாலையோரங்களில் வெட்டப்படும் மரங்களைக் காட்டிலும் அவற்றுக்குப் பதிலாக நடப்படும் மரங்களின் எண்ணிக்கை அதிகம். 
இதை கவனத்தில் மரக்கன்றுகள் நடுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 
வருங்காலத்தில் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதை இளைஞர்களுக்கு சிறந்த முறையில் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர். 
கருத்தரங்கில், புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் சி.பி.சந்திரசேகர், லயோலா கல்லூரி நிறுவனர் ஜெயபதி பிரான்சிஸ், பொருளியல் துறை தலைவர் பி.பகவான்தாஸ், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் ஷியாம்பிரபு, தீரஜ்பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT