இந்த சந்திப்பில் இருந்தது நட்பு மட்டுமே: ரஜினியை சந்தித்த பின்னர் கமல் பேட்டி!
இந்த சந்திப்பில் இருந்தது 'நட்பு' மட்டுமே என்று ரஜினிகாந்த்தினைச் சந்தித்த பின்னர் நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்த சந்திப்பில் இருந்தது 'நட்பு' மட்டுமே என்று ரஜினிகாந்த்தினைச் சந்தித்த பின்னர் நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
அதேபோல அரசியல் பிரவேசத்தினை அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் நியமனம் , கூட்டங்கள் என்று தொடர்ந்து பரபரப்பாக செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் ஞாயிறு மதியம் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் 'திடீர்' சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது கூறியாதவது:
எனது மிக முக்கியமான ஒரு பயணத்திற்கு முன்னதாக நண்பர் ரஜினிகாந்தைச் சந்திக்க வந்திருந்தேன். முதலில் அரசியலில் ஈடுபடுவது என்று முடிவெடுத்த உடன் அவரிடம்தான் தெரிவித்தேன். இது முழுக்க முழுக்க நட்புரீதியான ஒரு சந்திப்பு மட்டுமே. அரசியல் கிடையாது. நட்புதான் இங்கு பிரதானம்.
எனது பயணத்திற்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். எனது பயணம் தொடர்பாக பிற அரசியல் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது திமுக தலைவர் கருணாநிதியினை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் மறுத்துள்ளதாக வந்த தகவல் உண்மையல்ல.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.