முகப்பு
தமிழ்நாடு

வருக புது யுகம் படைக்க: ஆதரவாளர்களுக்கு கமல் பகிரங்க அழைப்பு! 

நாளை மதுரையில் நடைபெறவுள்ள தனது அரசியல் பிரவேச கூட்டத்திற்கு தனது ஆதரவாளர்களுக்கு நடிகர் கமல் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

சென்னை: நாளை மதுரையில் நடைபெறவுள்ள தனது அரசியல் பிரவேச கூட்டத்திற்கு தனது ஆதரவாளர்களுக்கு நடிகர் கமல் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னூட்டமாக ஞாயிற்றுக் கிழமை அன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரை கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

அத்துடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திங்கள் அன்று காலை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து அவரிடமும் வாழ்த்துப் பெற்றார். செவ்வாயன்று காலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கமலைச் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

முன்னதாக ஏற்கனவே கமல் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து ஆலோசனைப் பெற்றார். அவர்களோடு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோரையும் அவர் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் நாளை மதுரையில் நடைபெறவுள்ள தனது அரசியல் பிரவேச கூட்டத்திற்கு பங்கேற்க வருமாறு தனது ஆதரவாளர்களுக்கு நடிகர் கமல் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது

நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க!.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →