காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், சீமான், ஜி.கே.வாசன், கி.வீரமணி, ஜி.கே.மணி, சரத்குமார், செ.கு.தமிழரசன், தமிமுன் அன்சாரி, வேல்முருகன், கிருஷ்ணசாமி, தனியரசு, ஈஸ்வரன், எல்.கே.சுதீஷ், காதர் மெகிதீன் உட்பட மொத்தம் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:
காவிரி விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக உரிமைகளை நிலைநாட்ட பாடுபட வேண்டும். அனைத்து கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். முக்கியப் பிரச்னைகளில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் பாடுபட வேண்டும். காவிரி நதிநீர்ப் பிரச்னை ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்த பிரச்னை. காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரின் கருத்துகளை ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கப்பூர்வமான முறையில் தெரிவிக்கப்படும் கருத்துகளை சட்டவல்லுநர்களின் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதில் பேசிய எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சகம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவிரி உரிமையை நிலைநாட்ட அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக ஆதரவு அளிக்கும், காவிரியை தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் கர்நாடகாவின் சுயநலப்போக்கு இன்றுவரை மாறவில்லை, பிரதமரைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சிறந்த வழக்கறிஞர்களை நியமித்து காவிரி நீரை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; காவிரி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வலியுறுத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், இதுதொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்தவும் இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சித் தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், மாலை 5:30 மணியளவில் அனைத்து கட்சிக் கூட்டம் நிறைவடைந்தது. இதில்,
1. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரத்திற்குள் அமைக்கப்பட வேண்டும்.
2. காவிரியில் தண்ணீர் குறைக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை முழுமையாக ஏற்று கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
3. முதல்வர் தலைமையில், அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் எம்பி.,க்கள் அடங்கிய குழுவுடன் பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலுள்ள தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துவது.
உள்ளிட்ட 3 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.