தமிழ்நாடு

சாலையோரத்தில் கோலம் போடுவதால் குப்பைகள் போடுவது குறைந்து வருகிறது! மக்களிடையே வரவேற்கத்தக்க மாற்றம் 

சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க, சாலையை சுத்தம் செய்து கோலமிடும் வழக்கத்தை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருக்கும்

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க, சாலையை சுத்தம் செய்து கோலமிடும் வழக்கத்தை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் நிலையில், பல இடங்களில் கோலமிடாத நிலையிலும் குப்பை கொட்டுவதை மக்கள் தவிர்ப்பதைக் காணமுடிகிறது. மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுவருவதையே இது காட்டுவதாக நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளில் குப்பைகள், நகராட்சி நிர்வாகமே துப்புரவுத் தொழிலாளர்களைக் கொண்டு குப்பைகள் அகற்றிவந்தது. முழு வெற்றியை ஈட்டும் அளவுக்கு பணிகளில் திருப்தி காணமுடியவில்லை.  கடந்த ஓராண்டுக்கு முன்பு துப்புரவுத் தொழிலாளர்களிடம் இப்பணியைக் கொடுக்காமல், வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் நேரடியாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையாக வாங்கி, திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் நகராட்சி நிர்வாகம் ஹேண்ட் இன் ஹேண்ட் என்ற நிறுவனத்திடம் பணிகளை ஒப்படைத்தது. 
இந்நிறுவனம் 24 சிறிய ரக சுமை ஏற்றும் வாகனங்களைக்கொண்டும், 3 டிராக்டர்கள் மூலமும் நாளொன்றுக்கு 130 தொழிலாளர்களை (பசுமை நண்பர்கள்) பயன்படுத்தி மக்களிடமிருந்து குப்பைகளை வாங்கி, பறவைப்பேட் மறுசுழற்சி மையத்துக்கு கொண்டு சேர்க்கிறது.
தூய்மையான, பசுமையான காரைக்கால் என்ற திட்டத்தில் வாரந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களைக்கொண்டு குப்பைகளை சாலையிலும், பொது இடத்திலும் கையாளும் முறை குறித்து விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணி மேற்கொண்டாலும், சாலையோரங்களில் குப்பைகள் கொட்டிச் செல்லும் பழக்கம் மக்கள், வணிகர்களிடமிருந்து பெருமளவில் மாற்றத்தைக் காணமுடியாத நிலையே தொடர்ந்தது.
புதுச்சேரி அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் சூழலில், காரைக்கால்  நகராட்சி நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கு நிதி தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், குப்பைகளை அகற்றத்துக்கு மட்டும் மாதம் ரூ.37 லட்சத்தை அரசு ஒதுக்கித்தருகிறது. எனினும்,  நகராட்சி வார்டுப் பகுதியில் 24 ஆயிரம் வீடுகள் மற்றும் சுமார் 2 ஆயிரம் சிறிய, நடுத்தர, பெரிய வணிக நிறுவனங்களில் இருந்து குப்பைகள் வெளியேற்றப்படுகின்றன. இவ்வளவு செலவு செய்தும் குப்பைகளை முறையாக மக்கள் கையாள்வதில்லை என்ற நிலை காரைக்காலில் உள்ளது.
பல்வேறு விழிப்புணர்வுகள் செய்யப்பட்டும் அது முழு வெற்றியை தராத நிலையில், திருவாரூர் நகராட்சி சார்பில், சாலையோரத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்க, குப்பை கொட்டுமிடத்தில் கோலமிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையே காரைக்கால் நகராட்சி நிர்வாகமும் நிகழ்மாத முற்பகுதியில் தொடங்கியது. 
குப்பைகள் கொட்டப்பட்ட பல  சாலையோரப் பகுதியில் இம்மாதிரி கோலமிடும் பழக்கத்தை பசுமை நண்பர்கள் மேற்கொள்ளத் தொடங்கினர். எந்தெந்த பகுதியில் கோலமிடப்பட்டு பின்னர் கோலமிடுவது  கைவிடப்பட்டதோ, அந்த இடத்தில் மக்கள் குப்பைகளைக் கொட்டாமல், பசுமை நண்பர்களிடமே ஒப்படைக்கும் போக்கு ஏற்பட்டிருப்பதை காணமுடிகிறது. எந்த நேரம் பார்த்தாலும் குப்பைக் குவியல் காணப்படும் பல சாலை சந்திப்புகள், தற்போது தூய்மையாக காட்சியளிப்பது பார்ப்போரை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது என கூறலாம்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் டி.சுதாகர் செவ்வாய்க்கிழமை கூறும்போது, நகராட்சி வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தினமும் 38 முதல் 40 டன் குப்பை சேகரிக்கப்பட்டு பறவைப்பேட் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலையில் குப்பை கொட்டுமிடங்களை தூய்மை செய்து, கோலமிடும் பழக்கத்தை மேற்கொண்டோம். இதன் பிறகு சில நாள்கள் அந்த பணி செய்யாத நிலையில், மக்கள் அந்த இடத்தை தூய்மையாகவே பராமரிக்க பழகியுள்ளது வரவேற்புக்குரிய ஒன்றாகும். இந்த செயல் மேம்படவேண்டும்.
தொழிலாளர்கள் பணி சுமையில் தினமும் கோலமிடுவது என்பது இயலாத ஒன்றாக இருக்கிறது. எனவே, எங்கெங்கெல்லாம் குப்பை கொட்டப்படுகிறதோ அந்த இடத்தில் பெயிண்ட் மூலம் நிரந்தர நிலையில் கோலமிட பரிசீலிக்கப்படுகிறது. 
அதுபோல தூய்மையைப் பராமரிக்கத் தேவையான வேண்டுகோள் கருத்துகள் கொண்ட பதாகைகள் வைக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. இவையிரண்டுக்கும் போதி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டியுள்ளது.
மக்கள் மனதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருப்பது வரவேற்கப்படும் நிலையில், குப்பைகளை தம்மை தேடிவரும் தொழிலாளர்களிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என்ற மனநிலையை உறுதியாக கொண்டுவிட்டால், காரைக்கால் நகரம் சுகாதாரமான நகரமாக விரைவில் உருவெடுக்கும் என்றார்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனப் பிரதிநிதி ஒருவர் கூறும்போது, மக்காத குப்பைகளைக்கொண்டு பறவைப்பேட் மையத்தில் மறுசுழற்சி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
இந்த குப்பைகளை குவியலாக்கி, சாணத்தால் மூடப்படுகிறது. தொடர்ந்து சாணத்தின் கரைசல் தெளித்துவரும்போது 3 மாதத்தில் அவை மக்கிவிடுகிறது. இவற்றை சலித்து இயற்கை உரமாக அனுப்புகிறோம். தற்போது சலிப்பு செய்வதற்கு இயந்திரம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். 
இது முற்றிலும் இயற்கை விவசாயம் செய்வோருக்குப் பயன்படுகிறது. மக்காத குப்பைகள் தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாகவே மக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்துத் தருவதில் ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அதுபோல சில சாலையோரப் பகுதியில் கோலமிடும் பழக்கத்திற்குப் பின் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கின்றனர். இந்த போக்கு மற்ற எல்லா பகுதியிலும் வந்தால் நல்லது என்றார்.
கழிவுகளை அகற்றும் விழிப்புணர்வுப் பணியை அமைச்சர், சட்டப் பேரவை உறுப்பினர்கள், ஆட்சியர் உள்ளிட்டோர் முகம் சுளிக்காமல் செய்யத் தொடங்கிவிட்டதும், மாணவர்கள் தீவிரமாக இதில் ஈடுபடத் தொடங்கிவிட்டதும், பொதுமக்களிடையே நிச்சயம் மாற்றம் வந்தே தீரும் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT