தமிழ்நாடு

உலகத்துக்கே தலைமையேற்கும் நாடாக இந்தியா மாறும்: 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி

தினமணி

உலகத்துக்கே தலைமை ஏற்கும் நாடாக இந்தியா மாறும் என்று துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி கூறினார்.
 தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சோ எஸ். ராமசுவாமி இரண்டாவது நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் "உலகம் நான்காம் தலைமுறை மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பங்கு' என்ற தலைப்பில் அவர் பேசியது:
 தொழில்முனைவோருக்குக் கல்வி பெரிதல்ல. தன்னம்பிக்கை இருந்தால் வெற்றியாளராக முடியும். குஜராத்தில் செயற்கை வைரக் கற்கள் பட்டை தீட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் ஐந்தாம் வகுப்பைக் கூட தாண்டியதில்லை. ஆனால், அத்தொழிலில் அவர்கள் வெற்றியாளர்களாகத் திகழ்கின்றனர். செயற்கை வைரக் கற்களை இறக்குமதி செய்து, பட்டைத் தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதேபோல, திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில்முனைவோர்களும் சாதனை படைக்கின்றனர்.
 18 ஆம் நூற்றாண்டில் இந்த உலகை ஆசிய நாடுகள்தான் தலைமையேற்று வழிநடத்தின. அதன் பின்னர், மேற்கத்திய நாடுகள் தலைமை ஏற்றன. இப்போது மீண்டும் இந்த உலகை ஆசிய நாடுகள் தலைமை ஏற்கும் நிலை உருவாகி வருகிறது.
 உலகளவிலான பொருளாதார வளர்ச்சியில் ஆசியாவின் பங்கு 51 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ராணுவ வலிமை, புவிசார் வலிமை, தத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் உலகத்துக்கே தலைமை ஏற்கும் நாடாக இந்தியா மாறப் போகிறது. எனவே, நம் நாடு விரைவில் வல்லரசாக மாறும்.
 அமெரிக்காவில் 80 சதவீத சேமிப்புகள் நிறுவனங்களைச் சார்ந்ததாக இருக்கிறது. அங்கு தனி நபர் சேமிப்பு வெறும் 20 சதவீதம்தான். இதனால்தான் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. அந்நாட்டு மக்கள் ரூ. 120 கோடிக்கு கடன் அட்டைகளை வைத்திருக்கின்றனர். அந்த அளவுக்குக் கடனாளி சமூகமாக அமெரிக்கா இருக்கிறது.
 அமெரிக்காவில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக வாழ்கின்றனர் என்றால் அங்கு வியப்பாகப் பார்க்கின்றனர். குழந்தைகளின் உயர் கல்விக்குப் பெற்றோர் உதவமாட்டார்கள். அந்நாட்டில் உறவுகளைப் பற்றிய கவலை இல்லை. அவர்களிடம் சுயநலப் போக்குதான் அதிகமாக இருக்கும். ஆனால், நம் நாட்டில் அதுபோன்ற நிலை கிடையாது. இந்தியாவில் குடும்பத்தில் ஒன்றாக இணைந்து வாழும் நிலை உள்ளது.
 உலகளவில் பெண்கள் ஆதிக்கம் பெற்றவர்களாக மாறி வருகின்றனர் என்றும், அதனால், பெண்களுக்குப் பொறுப்புணர்வு அதிகரித்து வருகிறது எனவும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கைக் கூறுகிறது. எனவே, ஆண்களை விட பெண்களுக்குக் குடும்பப் பொறுப்புகள் அதிகரித்துள்ளன.
 நம் நாட்டில் கலாசாரம், விழுமியங்கள், உறவுகள் ஆகியவை உயிர்ப்புடன் இருப்பதற்குப் பெண்களே காரணம். இளைஞர்கள் சுதந்திரமாகச் செயல்படும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு, சுதந்திரமான எண்ணங்களுடன் செயல்பட வேண்டும். உலகம் நான்காம் தலைமுறையில் இந்தியா வெற்றிகரமாகச் செயல்படும் என்றார் குருமூர்த்தி.
 நிகழ்ச்சியில் துணைவேந்தர் ஆர். சேதுராமன், முதன்மையர்கள் எஸ். வைத்திய சுப்பிரமணியம் (திட்டம் மற்றும் வளர்ச்சி), வி. பத்ரிநாத் (மேலாண்மைத் துறை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT