தமிழ்நாடு

வரம்பு மீறலுக்கு தமிழகத்தில் இடமில்லை

DIN

தமிழகத்தில் வரம்பு மீறலுக்கு இடமில்லை என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பாரம்பரியமிக்க 'தினமணி' நாளிதழில் 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் எந்தவித தயக்கமுமின்றி உடனடியாக விளக்கம் அளித்தார். அதில், யாருடைய மனதையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும், அப்படி புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாகவும் கூறியிருந்தார்.
மேலும், அந்தக் கட்டுரையைப் பிரசுரித்த 'தினமணி' நாளிதழும், ஆசிரியர் வருத்தம் என்று போடாமல் 'தினமணி வருந்துகிறது' என்று ஒட்டுமொத்தமாக நாளிதழே வருத்தம் தெரிவிக்கும்விதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்து மதம் உள்ளிட்ட எந்த ஒரு மதத்தினரின் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விமர்சிப்பதில் திமுகவுக்கு உடன்பாடு இல்லை. 
வேற்றுமையில் ஒற்றுமை என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு வலுச் சேர்க்கும்விதத்தில் அனைத்து மதத்தினரும் ஜாதி வேறுபாடின்றி, சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை போன்ற நெறிகளை உயர்த்திப் பிடித்து நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும் என்பதுதான் திமுகவின் விருப்பம்.
இந்நிலையில், அமைதி தவழும் தமிழகத்தில் சிலர் தங்களின் சுயநலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்துக்காகவும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும், தரம் தாழ்ந்த வகையிலும் கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜனநாயகத்தில் கருத்துக்கு மாற்றுக் கருத்து மட்டும் இருக்க முடியுமே தவிர, அநாகரிகத்துக்கும், வரம்பு மீறலுக்கும் தமிழகத்தில் நிச்சயம் இடமில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT