தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு வேறு சாலை விபத்துகளில் 7 பேர் சாவு

DIN

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். 
வத்திராயிருப்பு அருகேயுள்ளது மாத்தூர். இக்கிராமத்திலிருந்து சிலர் அழகாபுரியில் உள்ள ஒரு மூலிகைப் பண்ணையில் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று, சரக்கு வேனில் மூலிகைகளை ஏற்றிக்கொண்டு அழகாபுரி நோக்கிச் சென்றுள்ளனர். வேனின் முன்புறம் ஓட்டுநர் சேசபுரத்தைச் சேர்ந்த அன்பரசு (39) உள்பட மூவரும், பின்புறம் 5 பேரும் பயணித்துள்ளனர்.
இந்த வேனின் ஓட்டுநர் அன்பரசு செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் காடனேரி விலக்கு அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி ஓட்டுநரான தம்பிபட்டியைச் சேர்ந்த நெருஞ்சி மகன் மகாலிங்கம் (31), வேன் தாறுமாறாக வருவதை அறிந்து லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டார். இருப்பினும், அதிவேகமாக வந்த சரக்கு வேன் லாரி மீது மோதியது. 
இதில், சரக்கு வேனிலிருந்து தூக்கி வீசப்பட்ட மாத்தூர், பாலு மனைவி மாரியம்மாள் (40), வெள்ளைச்சாமி மகன் தங்கம் (60), அமல்ராஜ் மனைவி லூர்து (60), மாரியப்பன் மனைவி கருப்பாயிம்மாள் (50) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், சரக்கு வேனில் பயணித்த தங்கம் மனைவி சாந்தி (55), கருமலை மனைவி காளியம்மாள் (50), கோவிந்தராஜ் மனைவி சித்ரா (25) மற்றும் ஓட்டுநர் அன்பரசு ஆகியோர் பலத்த காயமடைந்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி சாந்தி உயிரிழந்தார். இந்த விபத்தில் மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். 
சம்பவ இடத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கே. ராஜராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து நத்தம்பட்டி போலீஸார், சரக்கு வேன் ஓட்டுநர் அன்பரசு மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மரத்தில் கார் மோதி இருவர் சாவு: கேரள மாநிலம், கொல்லம், இரவில்புரத்தைச் சேர்ந்த ரஹிம்குட்டி (58), அப்துல் ரகுமான் (59), அலிஅக்பர் சலீம் (60), அப்துல் கரீம் (55) ஆகியோர், 2 நாள்களுக்கு முன் ஊரிலிருந்து புறப்பட்டு, நாகூர் தர்காவுக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து திங்கள்கிழமை அதிகாலையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ரஹிம் குட்டி ஓட்டி வந்துள்ளார். கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட போலீஸ் துப்பாக்கிச் சுடும் மைதானம் அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலையோர மரத்தில் கார் மோதியது.
இதில், ரஹிம் குட்டி மற்றும் அப்துல்ரகுமான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அலி அக்பர் சலீம், அப்துல் கரீம் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT