தமிழ்நாடு

போக்குவரத்துப் போலீஸாரைக் கண்காணிக்க சீருடையில் கேமரா பொருத்தத் திட்டம்

சென்னையில் பணியில் இருக்கும் போக்குவரத்துக் காவலர்களைக் கண்காணிக்க, அவர்களின் சீருடையில் தோள்பட்டை பகுதியில் கேமரா பொருத்தும் திட்டத்தைச் செயல்படுத்த சென்னை

கே.வாசுதேவன்

சென்னையில் பணியில் இருக்கும் போக்குவரத்துக் காவலர்களைக் கண்காணிக்க, அவர்களின் சீருடையில் தோள்பட்டை பகுதியில் கேமரா பொருத்தும் திட்டத்தைச் செயல்படுத்த சென்னை பெருநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னையில் தற்போது சுமார் 50 லட்சம் வாகனங்கள் இயங்குகின்றன. இவற்றில் 78 சதவீதம் இரு சக்கர வாகனங்களாகும். கடந்த 15 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 300 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப விபத்துகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. அதிக சாலை விபத்துகள் நடைபெறும் பெருநகரங்களில் கடந்த இரு ஆண்டுகளாக சென்னை முதல் இடத்தில் உள்ளது. 2017-இல் சென்னையில் 7,466 விபத்துகளில் 1,341 பேர் உயிரிழந்தனர். 5, 828 பேர் காயமடைந்தனர். இது 2016-ஆம் ஆண்டைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். உயிரிழப்பு மட்டும் 2016-ஆம் ஆண்டை விட 158 அதிகமாகும்.
இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு, சாலை விபத்துகளைக் குறைப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுக்கத் தொடங்கியுள்ளது. முக்கியமாக சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்குகளைப் பாரபட்சமின்றி போலீஸார் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்காக சென்னையில் போக்குவரத்துப் போலீஸார் சுமார் 150 இடங்களில் தினமும் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனர். நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்படுகிறது.
தரமணி சம்பவம்: போலீஸார் தற்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யும் நிலையில், தரமணியில் கடந்த புதன்கிழமை சீட் பெல்ட் அணியாமல் வந்ததாக வழக்குப் பதிவு செய்தபோது, கார் ஓட்டுநர் மணிகண்டனுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் மணிகண்டன் தீக்குளித்த சம்பவம் காவல் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் போக்குவரத்துப் போலீஸார் அத்துமீறி நடந்து கொண்டதாகப் புகார் கூறப்படுவதால், வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸாரைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தோள்பட்டையில் கேமரா: இதற்காக போக்குவரத்துப் போலீஸாரின் சீருடையில் தோள்பட்டைப் பகுதியில் பொருத்தும் வகையிலான புதிய தொழில்நுட்ப கேமராவைப் பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக போக்குவரத்துக் காவல் துறையின் திட்டமிடல் பிரிவு ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே இத்திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகள் ஆலோசனை செய்து வந்த நிலையில், தரமணி சம்பவத்தை அடுத்து உடனடியாக இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான முனைப்பு காட்டப்பட்டு வருகிறது.
150 கேமராக்கள் வாங்க முடிவு: இத்திட்டத்தில் தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள 150 கேமராக்களை வாங்க காவல்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கேமரா வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸாரின் தோள்பட்டையில் பொருத்தப்படும். கேமராவில் பதிவாகும் காட்சியை நேரலையாக காவல் கட்டுப்பாட்டு அறையில் காண முடியும். இதற்கான சர்வர், காவல் கட்டுப்பாட்டு அறையில் நிறுவப்படும். இந்தக் கேமரா 32 ஜிபி கொள்திறன் கொண்டதாக இருக்கும். இந்த கேமராவை தொடர்ந்து 8 மணி நேரம் இயக்கவும், அதில் பதிவாகும் காட்சியை சேமித்து வைக்கவும் முடியும். இத்தகைய கேமராக்கள் மிகத் துல்லியமாக ஒளி, ஒலியைப் பதிவு செய்யும் திறன் கொண்டவை.
இதுகுறித்து சென்னை காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறியதாவது:
ஏற்கெனவே கேரளம், தெலங்கானா மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கேமரா மூலம் போலீஸார் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதத்தையும், பொதுமக்கள் போலீஸாரிடம் நடந்து கொள்ளும் விதத்தையும் நேரலையில் காண முடியும். இதனால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால், யார் மீது தவறு இருக்கிறது என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும்.
இக்கேமரா மூலம் போக்குவரத்துப் போலீஸாரை முழுமையாகக் கண்காணிக்க முடியும் என்பதால், அவர்கள் ஏதேனும் தவறும் செய்தால் உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இதனால் காவல்துறை மீதான புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்தப் புதிய தொழில்நுட்பத்தை இன்னும் ஓரிரு வாரங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிஐஎஸ்எப் வீரர்களின் சீருடையிலும் கேமரா
சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழிலகப் படை வீரர்கள்(சிஐஎஸ்எப்) சீருடையிலும் வரும் மார்ச் மாத இறுதிக்குள் கேமரா பொருத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் விமான நிலையத்தில் பணிபுரியும் சிஐஎஸ்எப் வீரர்கள், தங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை எளிதில் அறிந்துகொள்ளவும் கண்காணிக்கவும் முடியும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT