தமிழ்நாடு

வீட்டில் இருந்தபடியே வருவாய்த் துறை சான்றிதழ்: புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர்

DIN

வீட்டில் இருந்தபடியே வருவாய்த் துறையின் சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய இணையதளத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும், அரசு கேபிள் தொலைக்காட்சியில் உயர்தர துல்லியமான சேவைக்கான எச்.டி., செட்-டாப் பாக்ஸ்கள் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:-
அரசு கேபிள் தொலைக்காட்சி சந்தாதாரர்களுக்கு உயர்தர துல்லியமான தொலைக்காட்சி சேவையை வழங்கும் வகையில், எச்.டி., செட்-டாப் பாக்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், ஐந்து சந்தாதாரர்களுக்கு எச்.டி., செட்-டாப் பாக்ஸ்களை வழங்கி திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கட்டணம் எவ்வளவு?: எச்.டி., செட்-டாப் பாக்ஸ்கள் குறைந்த விலையான ரூ.500 என்ற கட்டணத்தில் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக வழங்கப்படும். இப்போது தொடங்கப்படும் ஒளிபரப்பு சேவையில், மூன்றாவது தொகுப்பாக 380 சாதாரண வகை சேனல்களுடன், 45 எச்.டி., சேனல்களும் ரூ.225 கட்டணத்தில் அளிக்கப்படும். இந்தக் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரியும் சேர்க்கப்படும்.
பொது அலைபேசி செயலி: தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் செல்லிடப்பேசி ஆளுமைக்கான புதிய செயலி தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுத் துறைகள் முதல் உள்ளாட்சித் துறைகள் வரை நாடு முழுவதும் மின்னாளுமை மூலம் அளிக்கப்பட்டு வரும் சேவைகளை ஒரே தரவுதளத்தின் கீழ் இந்தச் செயலி வழங்கும். இந்தச் செயலியில் வருவாய்த் துறையைச் சேர்ந்த மூன்று சேவைகளான ஜாதி சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிட மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் ஆகிய சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பொது மக்கள் தங்களது செல்லிடப்பேசியில் இந்தச் செயலியைப் (மஙஅசஎ) பதிவிறக்கம் செய்து அதன்மூலம் விண்ணப்பித்து சான்றிதழைப் பெற முடியும்.
திறந்தநிலை சேவைதளம்: பொது மக்களுக்கான அரசுத் துறைகளின் 63 சேவைகள், தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுசேவை மையங்கள் மற்றும் இணைய சேவை மையங்கள் வழியாக மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மே முதல் ஆகஸ்ட் வரையில் சான்றிதழ்கள் பெற உச்சகட்ட காலம் என்பதால் பொது மக்கள் பெருமளவில் இந்த மையங்களை அணுகுவதால் நெரிசல் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில் இணையதளம் மூலம் பொது மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே எந்த நேரமும் எளிதில் விண்ணப்பித்துப் பெற்றிடும் வகையில் புதிய திறந்தநிலை சேவைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வருவாய்த் துறையின் 20 சான்றிதழ் சேவைகள் அளிக்கப்பட உள்ளன. பொதுமக்களுக்கான திறந்தநிலை சேவை தளத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT