இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்கள் மற்றும் 187 விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை
இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்கள் மற்றும் 187 விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 184 விசைப்படகுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருடன் இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் அண்மையில் சிறைபிடித்தனர். மேலும் மண்டபம் மீனவர்கள் நான்கு பேருடன் ஒரு விசைப்படகும் சிறைபிடிக்கப்பட்டது. படகுகளை பறிமுதல் செய்ததுடன், மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர் சங்கப் பொதுச் செயலாளர் என்.ஜே. போஸ் தலைமையில் அனைத்து மீனவர் சங்கத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், இலங்கையில் உள்ள 187 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள விசைப்படகுகளுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், தமிழக மீனவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவை பயன்படுத்தக் கூடாது என இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், மானிய விலை டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ், சகாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.