தமிழ்நாடு

தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்: இந்தக் கருணை பயனளிக்குமா?

DIN

மதுரை: நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளை மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்கு பொறுப்பேற்று சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் என தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும், அதுவரை மருத்துவக் கலந்தாய்வுக்கு தடை விதிப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மாநிலங்களவை எம்.பி. டி.கே. ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழில் தேர்வெதிய சுமார் 24,000 மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பின் போது ஏற்பட்ட பிழைகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் ரங்கராஜன் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில் இருந்த நிலையிலேயே, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, தமிழகத்தில் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடந்து நிறைவும் பெற்றுவிட்டது.

முதற்கட்ட கலந்தாய்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் முழுவதுமாக இடங்கள் நிரம்பி, சேர்க்கை பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர்க்கைக் கட்டணங்களையும் செலுத்திவிட்டனர்.

தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 669 இடங்கள் மட்டுமே சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் சுமார் 24 ஆயிரம் மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டால் அவர்களுக்கு எப்படி மருத்துவ சேர்க்கை வாய்ப்பு கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது.

மீண்டும் தரவரிசைப் பட்டியல் நடத்தப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டால், ஏற்கனவே சேர்க்கை பெற்ற மாணவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது.

ஒருவேளை இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றால், அங்கு தீர்ப்பு எந்த வகையில் அமையும் என்று உறுதியாக சொல்ல முடியாது. எனவே, சிபிஎஸ்இ நிர்வாகம் 196 கருணை மதிப்பெண்களை வழங்கினாலும், அந்த கருணை, தமிழக மாணவர்களுக்கு பயனளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT