தமிழ்நாடு

ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது?: உயர் நீதிமன்றம் கேள்வி

DIN

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு புகார் குறித்த விசாரணையை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு விவரம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு, சகோதரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் மற்றும் தொழில் ரீதியான நண்பர்களான ஆர்.சுப்புராஜ், அவரது மனைவி உமா மகேஸ்வரியின் பெயரில் பல கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.
இதே போன்று பல பினாமிகளின் பெயரிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தின் வாரிசுகள் அமெரிக்கா, மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். அவரது மகன்கள் பல இந்திய நிறுவனங்களில் இயக்குநர்களாக உள்ளனர். 
வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை: தொழிலதிபர் சேகர்ரெட்டியிடம் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்த டைரியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 கோடி கொடுத்ததாக குறிப்புகள் உள்ளன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கடந்த மார்ச் 10- ஆம் தேதி புகார் அளித்தேன். அதன் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் எமிலியாஸ், இந்தப் புகாரை மனுதாரரிடமிருந்து பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது: இந்தப் புகார் கொடுத்து 3 மாதங்கள் ஆகிறது. இது தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சேகர் ரெட்டியின் டைரி குறிப்பில் பன்னீர்செல்வத்தின் பெயர் உள்ளதாக புகாரில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக்கூடாது? எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் மணிசங்கர், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT