தமிழ்நாடு

புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்: பேரவையில் நிறைவேற்றம்

DIN

மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் புதுவை சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
புதுவை சட்டப்பேரவை வியாழக்கிழமை கூடியதும் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்தார்.
அதேபோல, தனி நபர் தீர்மானங்களை முதன்மை எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த என்.எஸ்.ஜெ.ஜெயபால், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் இரா. அன்பழகன், திமுக குழுத் தலைவர் இரா.சிவா ஆகியோர் கொண்டு வந்தனர்.
தனி நபர் தீர்மானங்களையும், அரசின் தீர்மானங்களாக ஏற்று முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
புதுவை யூனியன் பிரதேசத்துக்கு 70 சதவீதம் மானியத்தை மத்திய அரசு அளித்து வந்தது. அது தற்போது, 25 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
அனைத்து மாநிலங்களும் 14-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி 42 சதவீதம் நிதி ஆதாரத்தை மத்திய அரசிடமிருந்து பெற்று வருகின்றன.
ஆனால், புதுவை யூனியன் பிரதேசம் இதுவரை மத்திய நிதிக் குழு வரம்பில் கொண்டு வரப்படவில்லை. நிதிக் குழுவில் இல்லாமலும், மானியங்களும் இல்லாத நிலையில் புதுவை உள்ளது.
சரக்கு, சேவை வரியைப் பொருத்தவரையில் புதுவையை மாநிலங்களுக்கு இணையாகக் கருதி நிதியைப் பிரித்துக் கொடுத்து வருகிறது. 
இந்தச் சூழலில் புதுவையை மாநிலமாக மாற்றுவது அவசியமானகிறது.
புதுவை அமைச்சரவைக்கும், சட்டப்பேரவைக்கும் இதர மாநிலங்களில் உள்ளது போல அதிகாரம் வழங்கவும், மக்கள் நலத் திட்டங்களை நிர்வாகத் தடைகளின்றி விரைந்து நிறைவேற்றவும், அரசு ஊழியர்கள் பணியிடங்களை நிர்ணயம் செய்யவும் புதுவை ஆட்சிப் பரப்பு முழு வளர்ச்சி பெறவும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி, பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்றார் அவர்.
என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் என்.எஸ்.ஜெ.ஜெயபால், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் இரா.அன்பழகன், திமுக குழுத் தலைவர் இரா.சிவா ஆகியோரும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் குரல் வாக்கெடுப்புக்குவிட்டு, ஒருமனதாக நிறைவேற்றியதாக அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT