தமிழ்நாடு

மயில்சாமி அண்ணாதுரை இன்று பணி நிறைவு

இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை (ஜூலை 31) பணி ஓய்வு பெறுகிறார்.

DIN


இஸ்ரோ செயற்கைக்கோள் மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செவ்வாய்க்கிழமை (ஜூலை 31) பணி ஓய்வு பெறுகிறார்.
அறிவியல் அறிஞரான மயில்சாமி அண்ணாதுரை, பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) செயற்கைக்கோள் மையத்தில் 36 ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது இம்மையத்தின் இயக்குநராக 2005 -ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் தனது பணியில் இருந்து செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறுகிறார்.
தனது பணிக்காலத்தில் ஐஆர்என்எஸ்எஸ் வரிசை, ஜிசாட் வரிசை, ஆஸ்ட்ரோசாட், கார்ட்டோசாட், இன்சாட் வரிசையில் 30 செயற்கைக்கோள்களை வடிவமைத்து, தயாரித்து, விண்ணில் செலுத்தியுள்ளார்.
இவரது அறிவியல் பணிகளை பாராட்டி, மத்திய, மாநில அரசுகள், பன்னாட்டு அமைப்புகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை 75 விருதுகளை வழங்கியுள்ளன. பல்வேறு பல்கலைக்கழகங்களும் இவருக்கு கெளரவ முனைவர் பட்டம் பாராட்டியுள்ளன. 'கையருகே நிலா', 'சிறகை விரிக்கும் மங்கள்யான்', 'அறிவியல் களஞ்சியம்' ஆகிய தமிழ் அறிவியல் நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.
வாழ்க்கை வரலாறு: கோவை மாவட்டம், கோதவாடி கிராமத்தில் 1958 -ஆம் ஆண்டு ஜூலை 2 -ஆம் தேதி பிறந்த அவர், தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். 1980-இல் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. பட்டமும், 1982 -இல் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் எம்.இ. பட்டமும், அதன்பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
1982 -ஆம் ஆண்டில் இஸ்ரோவில் பணியில் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, பல்வேறு செயற்கைக்கோள் வடிவமைப்புத் திட்டங்களில் இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். 
ஐஆர்எஸ்-1ஏ, இன்சாட்-2ஏ, இன்சாட்-2பி திட்டங்களில் இயக்க மேலாளராகவும், 1994 -இல் இன்சாட் -2சி செயற்கைக்கோள் திட்டத்தின் துணை இயக்குநராகவும், 1996 முதல் இன்சாட்-2சி, இன்சாட்-2டி, இன்சாட்-2இ, இன்சாட்-3பி, ஜிசாட்-1, இன்சாட்-3இ, எஜுசாட், இந்திய தொலை உணர்வு(ஐஆர்எஸ்), செவ்வாய் கிரகத்தை ஆய்வுசெய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் உள்ளிட்ட செயற்கைக்கோள்களை வடிவமைத்து, விண்ணில் செலுத்தும் திட்ட இயக்குநர் பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார்.
நிலவுக்கு செயற்கைக்கோளைச் செலுத்திய சந்திரயான் -1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை 2004 -ஆம் ஆண்டில் பொறுப்பேற்று, 2008-இல் அதனை விண்ணில் செலுத்தினார். 
இதைத்தொடர்ந்து, சந்திரயான் -2 திட்ட இயக்குநராக 2008 -இல் பொறுப்பேற்று பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தச் செயற்கைக்கோளை வரும் அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படவுள்ள ஆதித்யா திட்டப் பணியிலும் மயில்சாமி அண்ணாதுரை ஈடுபட்டு வந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்!

பாஜக மாநில செயலாளருக்கு எதிரான புகார்: சேலம் நீதிமன்றத்துக்கு உத்தரவு

இரவு முதல் பலத்த மழை! புது தில்லிக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை

திரௌபதி அம்மன் கோயிலில் பூணூல் மாற்றி வழிபாடு!

தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனை: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT