ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக ஆளுநர் பார்த்தார்: அப்பல்லோ மருத்துவர் சாட்சியம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவரை கண்ணாடி வழியாகப் பார்த்ததாக மருத்துவர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவரை கண்ணாடி வழியாகப் பார்த்ததாக மருத்துவர் அர்ச்சனா சாட்சியம் அளித்ததாக சசிகலா தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை ஆணையத்தில் சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். மேலும், அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்கள், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய சசிகலா தரப்பு வழக்குரைஞர்களுக்கு நீதிபதி ஆறுமுகசாமி அனுமதி அளித்தார். அதன்படி, இதுவரை 10-க்கும் மேற்பட்டோரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
அண்மையில், ஜெயலலிதாவின் தனி மருத்துவரான சிவகுமாரிடம் சசிகலா தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பேசியதாக கூறப்படும் ஆடியோவை விசாரணை ஆணையத்தில் சிவகுமார் தாக்கல் செய்தார். அந்த ஆடியோவில் அப்பல்லோ மருத்துவர் அர்ச்சனாவின் குரல் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அவருக்கும், அப்பல்லோ மருத்துவமனையின் செவிலியர் ரேணுகா என்பவருக்கும் கடந்த சனிக்கிழமை (ஜூன் 2) விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பியது.
கண்ணாடி வழியாக ஆளுநர் பார்த்தார்: இதைத் தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவர் அர்ச்சனா, கண்காணிப்பு செவிலியர் ரேணுகா ஆகியோர் விசாரணை ஆணையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, வெளியே வந்த சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சிலமுறை அவரிடம் அர்ச்சனா பேசியதாகவும், அப்போது, அவர் நல்ல மனநிலையில் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை கண்ணாடி வழியாகப் பார்த்தார். அப்போது, தான் அங்கு நின்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
செவிலியர் ரேணுகா சாட்சியம் அளிக்கையில், மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் தன்னுடன் சிலமுறை பேசியதாகக் குறிப்பிட்டார் என்றார் வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன்.
அப்பல்லோ மருத்துவர் பிரசன்னா, செவிலியர் ஷீலா ஆகியோர் விசாரணை ஆணையத்தில் புதன்கிழமை ஆஜராக உள்ளனர்.