தமிழ்நாடு

கல்லாறு அரசு பழப் பண்ணையில் மருத்துவ குணம் கொண்ட துரியன் பழ சீசன் தொடங்கியது

DIN

மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு அரசுப் பழப் பண்ணையில் மருத்துவக் குணம் கொண்ட துரியன் பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
நீலகிரி மலையடிவாரத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து-உதகை சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது. 
இப்பண்ணையில் பழங்களின் அரசி எனப்படும் மங்குஸ்தான், இயற்கை காயகல்பமான துரியன், லிச்சி, லாங்சாட், ரம்பூட்டான், மாதுளை, கொய்யா, பலா, பப்ளிமாஸ், பன்னீர் கொய்யா போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பண்ணைக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் வரை வந்து செல்கிறார்கள். விவசாயிகளுக்குத் தேவையான பாக்கு மர நாற்றுகளும், காபி, கோ-கோ மொட்டு கட்டிய செடிகளும், பல்வேறு பழ, வாசனை திரவிய, மலர் அலங்கார செடி, பழ வகை செடிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. 
தற்போது இப்பண்ணையில் மருத்துவக் குணம் கொண்ட அரிய வகை துரியன் பழங்களின் சீசன் தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மிக அரிதாக விளையும் இப்பழங்கள் கல்லாறு அரசு பழப்பண்ணை மற்றும் பர்லியாறு அரசு பழப் பண்ணையில் விளைவிக்கப்படுகிறது. குழந்தை இல்லாதோருக்கு குழந்தை வரம் தரும் மருத்துவக் குணம் கொண்ட அரியவகை பழமாக இது கருதப்படுவதால் சீசன் தொடங்கும் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பொது மக்கள் காத்திருந்து இதை வாங்கி செல்கிறார்கள். 
மலேசியாவை தாயகமாகக் கொண்ட துரியன் பழங்கள் குறிப்பிட்ட மலைசார்ந்த இடங்களில் மட்டும் விளைகின்றன. கல்லாறு, பர்லியாறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட துரியன் மரங்கள் உள்ளன. கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் ஆண்டு முழுவதும் சீரான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் துரியன் பழ மரங்கள் நன்கு வளர்கின்றன. துரியன் பழங்களின் சீசன் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையாகும். இப்பண்ணையில் ஆங்கிலேயர் காலத்தில் வளர்க்கப்பட்ட துரியன் பழ மரங்கள் 200 அடிக்கு மேல் உயரமாக வளர்ந்து தற்போது சீசன் காரணமாக நூற்றுக்கணக்கான பழங்கள் காய்த்து தொங்குகின்றன. முற்கள் நிரம்பிய உயரமான இந்த மரங்களில் ஏறிப் பழங்களை பறிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதால், இதில் உள்ள பழங்கள் பழுத்து தானாக கீழே விழும் வரை காத்திருந்து துரியன் பழங்களை சேகரிக்கின்றனர். சிறியவகை பலாப் பழங்களை போல் முற்களோடு காட்சியளிக்கும் இப்பழங்களை உடைத்தால் நான்கு சுளைகளைக் கொண்ட பழங்கள் காணப்படும். திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தைப் பேறு கிட்டாத தம்பதிகள் இதை உண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என பரவலாக நம்பப்படுவதால் இப்பழங்களுக்கு கடும் கிராக்கி நிலவுகிறது. இது கிலோ ரூ. 650 முதல் ரூ. 750 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT