தமிழ்நாடு

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுக்க சதி: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி செயல்படுகிறார்கள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, திருக்கோயில் விருந்தினர் மாளிகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீதும், தமிழ் மீதும் அதிகமான பாசம் வைத்திருக்கிறார். தென்தமிழகத்தில், தமிழின் தலைநகரான மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் ஒப்புதல் தந்திருக்கிறார். இதற்காக தமிழ்ச் சமுதாயம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் எல்லா தரப்பு மக்களும் பயனடைவார்கள். மதுரை மீண்டும் பொலிவு பெறும்.
ஈரான் நாட்டில் தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி, குமரியைச் சேர்ந்த 21 மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டி எந்த வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது என்று செயல்படுகிறார்கள். பிறகு எப்படி தமிழகம் வளர்ச்சி அடைய முடியும்? கடந்த நான்கு ஆண்டுகளில் சாலைத் திட்டங்களை மக்கள் வேண்டாம் என்றபோது, அத்திட்டத்தை மாற்று இடங்களில் செயல்படுத்துகிறோம். ஆனால், தமிழகத்தில் மக்களுடைய திட்டங்கள்குறித்து அச்சத்தை உருவாக்கி, பிரச்னையை பூதாகரமாக்கி போராட்டத்தை தூண்டுவது, கலவரத்தை தூண்டுவது போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாதி இடங்களை பாஜக கைப்பற்றும். பிரதமர் மோடியின் சாதனைத் திட்டங்களுக்கு முன்பாக எந்தக் கட்சிகளும் வெற்றி பெற முடியாது என்றார் அவர்.
பேட்டியின்போது, மாநில விவசாய அணி பொதுச் செயலர் கணேஷ்குமார் ஆதித்தன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.செந்தில்வேல், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் தயா சங்கர், மாவட்டப் பொதுச் செயலர் சுரேஷ், கிழக்கு மாவட்டச் செயலர் பாலாஜி, எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் முருகதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT