தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

DIN

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டடப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. அந்த இடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருடன் சென்று வெள்ளிக்கிழமை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான 198.27 ஏக்கர் நிலம், சாலை அமைக்கும் பணிக்கான வரைபடம் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு 20 மெகாவாட் மின்சாரமும், 5 மில்லியன் லிட்டர் தண்ணீரும் தேவை என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்கு மேலூர் காவிரி கூட்டுக்குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அமைய உள்ள இடத்தின் வழியாகச் செல்லும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் குழாய்களை 60 அடி தூரத்திற்கு மாற்றி அமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர். மருத்துவமனை அமைக்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து இரண்டு நாள்களில் அறிக்கை தயார் செய்து அனுப்பப்படும். இன்னும் 2 ஆண்டுகளுக்குள் மருத்துவமனை கட்டட பணிகள் நிறைவுற்று பயன்பாட்டுக்கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். 
100 சிறப்பு மருத்துவர்கள், 50 சிறப்பு மருத்துவ பிரிவுகளோடு மருத்துவமனை இயங்கும். மேலும் 750 படுக்கை வசதிகள், 60 செவிலியர் இடங்கள் கொண்ட செவிலியர் கல்லூரி, 100 மருத்துவ படிப்பு இடங்களைக் கொண்ட மருத்துவக் கல்லூரி ஆகியவையும் இதில் இடம்பெறுகிறது. பல்வேறு மருத்துவ முறைகள் குறித்து ஆராய்ச்சிகளும் நடைபெறும். 
தமிழகத்தின் சுகாதார சேவையை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் விதமாக அனைத்து மருத்துவமனைகளின் கட்டமைப்பு, சர்வதேச தரத்தில் சிகிச்சை உள்ளிட்டவைகளுக்காக உலக வங்கி ரூ.2685 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகள் வருகின்ற 2019 பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. தவிர செங்கல்பட்டில் ரூ.590 கோடியில் கட்டப்பட்டுள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனத்தைய விரைவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தலா ரூ.150 கோடியில் பல்நோக்கு மருத்துவ கட்டடப்பணிகள் 95 சதவீதம் நிறைவுற்ற நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. சென்னை கிண்டியில் ரூ.142 கோடியில் அமைக்கப்படும் மூப்பியல் சிகிச்சை மையம் கட்டுமானப்பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது என்றார். 
ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், மருத்துவ பணிகளின் மேலாண்மை இயக்குநர் உமாநாத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, மாணிக்கம், பெரியபுள்ளான் மற்றும் பொதுப் பணித்துறையினர், குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியம், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT