முகப்பு
தமிழ்நாடு

மாணவர்களுக்காக 24 மணி நேர தகவல் மையம் தொடக்கம்: உதவித் தொகை, புதிய பாடத்திட்ட விவரங்களைக் கேட்கலாம்

பள்ளிக் கட்டணம், உதவித்தொகை, புதிய பாடத்திட்டம் போன்ற விஷயங்கள் குறித்து மாணவர்கள், பெற்றோர் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் கல்வி தகவல் மையத்தை முதல்வர் எடப்பாடி

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பெற்றோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 வழியாக தொடர்பு கொள்ளும் 24 மணிநேர கல்வி வழிகாட்டி உதவி மைய சேவையைத் தொடங்கி வைத்த முதல்வர்
பகிர்:

பள்ளிக் கட்டணம், உதவித்தொகை, புதிய பாடத்திட்டம் போன்ற விஷயங்கள் குறித்து மாணவர்கள், பெற்றோர் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் கல்வி தகவல் மையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். இந்த மையத்தின் அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் செயல்படும். 
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர துறைகள் குறித்த தேவையான தகவல்கள், தெளிவுரைகள், ஆலோசனைகள் ஆகியவற்றை மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பெறுவதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் (14417) தொடர்பு கொள்ளலாம். இந்த மையத்தை அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை பார்வையிட்டார். அப்போது பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெகந்நாதன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
'14417' இலவச எண் வழங்கும் சேவைகள்: இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது: அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிக் கூடங்கள், சிறப்புப் பயிற்சி மையங்கள், நூலகங்கள், பள்ளிக் கட்டணம், புத்தகங்கள் விநியோகம், தேர்வு நடைபெறும் நாள்கள், விண்ணப்பிக்கும் முறை, நலத்திட்டங்கள்; அவற்றைப் பெறும் முறை போன்ற பல்வேறு தகவல்களை பெற தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்து 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். 
மாணவர்களின் திறமை, ஆர்வத்துக்கேற்ப உயர்கல்வி பயில வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். தேர்வு தொடர்பான அச்சம் நீங்கி, தன்னம்பிக்கையூட்டும் உளவியல் ஆலோசனைகள் இந்த மையத்தில் அளிக்கப்படும். 
நிறை-குறைகளைத் தெரிவிக்கலாம்...மாணவர்கள், பெற்றோர் தங்களது குறைகள், ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பதிவு செய்யவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்தத் தகவல் மையம் உதவும்.
மேலும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் உயர் கல்விக்காக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்களை தெரிவிப்பது; கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த வழிகாட்டுதல்; மாணவர்களின் திறன் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கு தேவையான பயிற்சிக் கையேடுகள் வழங்குதல், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு விதமான உதவித்தொகைகள், கடனுதவி குறித்து தகவல் அளித்தல் போன்ற பணிகளையும் இந்த கல்வி தகவல் மையம் மேற்கொள்ளும்.
இந்த மையத்தில் அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். 
அவர்களுக்கு கல்வி, தொழில்நுட்பம் என பலதுறை சார்ந்த பயிற்சிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் இந்தத் திட்டத்தை மாணவர்கள், பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர். இந்த தகவல் மையத்தின் பணிகளை 'ஜிவிகே' அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அரசுடன் இணைந்து மேற்கொள்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →