ராஜீவ் கொலை வழக்கு கைதிக்கு 15 நாள் பரோல் : உயர் நீதிமன்றம் அனுமதி
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 15 நாள்கள் பரோல் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 15 நாள்கள் பரோல் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காக ஒரு மாதம் சாதாரண பரோல் வழங்கக் கோரி மனு அளித்தேன். என் மீது கடவுச்சீட்டு சட்டம், தொலைத்தொடர்பு சட்டம் என இரு சட்டங்களின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி, பரோல் வழங்க சிறைத் துறையினர் மறுத்துவிட்டனர்.
ராஜீவ் கொலை சம்பவத்தில் என் மீது கூட்டுச்சதி, கொலை என இரு பிரிவுகளின்கீழ் பதிவான வழக்கின் அடிப்படையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எனவே கடவுச்சீட்டு சட்டம், தொலைத் தொடர்பு சட்டம் ஆகியவை என்னைக் கட்டுப்படுத்தாது. எனவே எனக்கு நீண்ட நாள் அல்லது ஒரு மாதம் விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறைத்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'ரவிச்சந்திரன் உயிருக்கான பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் கருத்தில் கொண்டு அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள், ரவிச்சந்திரனுக்கு மார்ச் 5 முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை பரோலில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மனுதாரர் அரசியல் சார்ந்து பேசக் கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளனர். மேலும், பரோல் காலத்தில் வழக்குரைஞரைச் சந்திக்கவும், பதிவுத் துறை அலுவலகம், மற்றும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லவும், சொத்துகளைப் பார்வையிடுவதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.