கடந்த 20 ஆண்டுகளில் 1 லட்சம் லாரி டயர்களை கழற்றி மாட்டியுள்ளேன் என்கிறார் பஞ்சர் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள நாமக்கல்லைச் சேர்ந்த பெண் கண்மணி.
உடல் உழைப்பு சார்ந்த தொழில்களில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபட்டு வரும் நிலையில், பெண்களும் சிலர் களம் இறங்கி சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட புதன்சந்தையைச் சேர்ந்த பெண் வி.கண்மணி, கனரக வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
இவரது கணவர் என். வெங்கடாசலமும் இதே தொழிலில் ஈடுபட்டுள்ளார். இரு மகள், ஒரு மகன் உள்ளனர். முதல் மகள் தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும், மற்ற இருவரும் பொறியியல் பட்டப் படிப்பும் பயின்று வருகின்றனர். அவர்களும் விடுமுறை தினத்தில் உடன் பணிபுரிகின்றனர்.
இரு சக்கர வாகனம் முதல் பேருந்து, லாரி வரையிலான கனரக வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுதல், வெல்டிங் செய்தல், பேருந்து, லாரி டயர்களை கழற்றி மாட்டுதல் போன்றவற்றை அசாத்தியமாக செய்து வியப்பில் ஆழ்த்தி வருகிறார் கண்மணி.
இதுகுறித்து அவர் கூறியது:-
கணவர் என். வெங்கடாசலம் லாரி டயர்களுக்கு பஞ்சர் ஒட்டுதல், வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திருமணமான சமயத்தில் கணவருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவரும்போது, சிறு உதவிகள் செய்வேன். இதனால், தொழில் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பஞ்சர் ஒட்டுதல், இரும்பு பொருட்களுக்கு கேஸ், எலக்ட்ரிக் வெல்டிங் செய்யும் தொழிலை கற்றுக் கொண்டேன்.
இந்தச் சமயத்தில் கணவருக்கு பணி வாய்ப்பு கிடைத்ததால், துபாய் சென்றுவிட்டார். இதன்பின் 5 ஆண்டுகள் தனியாக பஞ்சர் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தேன். லாரி சக்கரங்களை கழற்றி மாட்டுதல், டியூப்புகளுக்கு பஞ்சர் ஒட்டுதல், வல்கனைஷ் செய்தல் என அனைத்து பணிகளும் தனியாக மேற்கொள்வேன். இதுமட்டுமின்றி இரும்பு பொருள்களுக்கு கேஸ், எலக்ட்ரிக் வெல்டிங் செய்தல் போன்றவையும் மேற்கொள்வேன்.
இதன்மூலம் வாகன ஓட்டிகளுக்கு நான் நன்கு பரிச்சயமானவராக உள்ளேன். விரைந்து சக்கரங்களை கழற்றி பஞ்சர் ஒட்டுவதால் இந்த வழியாகச் செல்லும்போது பஞ்சர் ஏற்பட்டால், வாகன ஓட்டிகள் எங்களது கடைக்குத் தான் வருவர். நாள்தோறும் சராசரியாக 10 வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுவேன்.
ஆரம்பத்தில் ஹோட்டல் வைக்கும்படி பலர் கூறினர். எனினும், தெரிந்த தொழிலை மேற்கொள்வதே சிறந்தது என்பதால், கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை சுமார் 1 லட்சம் லாரி டயர்களை கழற்றி மாட்டியிருப்பேன்.
தொழிலில் மிகவும் சிரமமானது தான், வீல் கழற்றும் இயந்திரம் மட்டும் 15 கிலோ இதனை தூக்கி காற்றின் வேகத்துக்கு அதிர்வில்லாமல் போல்டில் நிறுத்தினால் தான் சக்கரத்தை கழற்ற முடியும். பல நேரங்களில் இடுப்பை பிடித்துகொள்ளும், மருந்து தேய்த்துக்கொண்டு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் வேலை செய்ய தொடங்கிவிடுவேன்.
கை, கால்களில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. என் கை எலும்புகள், பல இடங்களில் தோலுக்கு மேல் முட்டிக்கொண்டு இருக்கின்றன. பெண்களுக்கு எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் வேண்டும், அதற்கு கைத்தொழில் அவசியம். இந்த நோக்கத்தில் தான், நான் இந்த தொழிலை கற்றுக்கொண்டேன்.
பெண்கள் தன் சொந்தக்காலில் நிற்க பழகிக்கொள்ள வேண்டும். இதற்கு கல்வி உதவும். படிக்காதவர்கள் சுய தொழிலை கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வர வேண்டும்.
4 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன், போதிய கல்வி அறிவு இருந்திருந்தால் எப்போதோ, தொழிலை வேறு நிலைக்கு கொண்டுபோயிருப்பேன்.
வரும் காலத்தில் சரக்கு ஆட்டோ கூண்டு கட்டும் தொழிற்கூடம், வீல் அலைன்மெண்ட் போன்றவற்றை தொடங்க திட்டமிட்டுள்ளேன். என் மகன் மூலம் தொழிலை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, ஆட்டோமொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ படிப்பில் சேர்த்துள்ளேன்.
தொழிலில் பொறுமை மிகவும் அவசியம், எந்த நேரத்தில் வேலை இருந்தாலும் தயங்காமல் செய்ய வேண்டும். யாரிடமும் கோபப்படக் கூடாது.
நான் பெரும்பாலும் அனைவரையும் கண்ணு என்றுதான் அழைப்பேன், இங்கு வரும் ஓட்டுநர்கள் என்னை அக்கா என்றே அழைக்கின்றனர். கறாராக இருந்தால் தொழிலில் வெற்றியடைய முடியாது, கனிவு இருக்க வேண்டும் என்கிறார் கண்மணி.
இதுகுறித்து வெங்கடாசலம் கூறியது: லாரி டயர்களை பஞ்சர் ஒட்டும் பணியில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவர். ஏனெனில், சக்கரங்களின் எடை அதிகம். நல்ல உடல் வலு இருந்தால் மட்டுமே சக்கரங்களை கழற்ற முடியும். எனினும், மனைவி கண்மணி எளிதில் கழற்றி மாட்டுவார். அவரது ஆர்வமே இதில் சிறந்து விளங்கக் காரணமாகும் என்றார்.
இன்று சர்வதேச மகளிர் தினம்
சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் வியாழக்கிழமை (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது.
பிரெஞ்சு புரட்சிக் காலத்தில் சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பாரீஸ் நகரில் 1789-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அது முடியாமல் போகவே அரசர் லூயி பிலிப் பதவி துறந்தார்.
அதனைத் தொடர்ந்து, கிரீஸ், இத்தாலி, பிரான்சு உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போர்க்கொடி தூக்கினர். இறுதியாக, பிரான்ஸ் மன்னர் லூயி பிளாங்க் பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும், அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தார். அவர் ஒப்புதல் அளித்த நாள் 1848-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதியாகும்.
1910-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன் ஹேகன் நகரில் அனைத்துலக பெண்கள் மாநாடு நடைபெற்று சர்வதேச மகளிர் அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பின் சார்பில் 1911-ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் மார்ச் 8-ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஐ.நா.வும் மார்ச் 8-ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. மருத்துவமனைகள், நிறுவனங்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.