தமிழ்நாடு

ரத்தமும், சதையுமாக எனது கைகளில் கரைந்த காதலும், கருவும்!: உஷாவின் கணவர் உருக்கம்

DIN

ரத்தமும் சதையுமாக, தனது காதல் மனைவியின் உயிர்மூச்சு தனது கையில் கடைசியாக கரைந்து போனதாகக் கதறகிறார் ராஜா (36).
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த சூலமங்கலத்தைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்ஏ சமூகவியல் படித்தவர். கல்லூரிப் பருவத்தில் களப்பணிக்காக, திருச்சி கே.கே. நகர் பகுதியில் உள்ள சிறப்பு பள்ளிக்கு சென்றபோது அவரது காதல் மனைவி உஷா (32), இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார். நட்பு காதலாக காதலுக்கு எதிர்ப்பு வர பின் இருதரப்பும் சுமூகமாகி 2015 ஜனவரி 24 இல் உஷாவைக் கரம் பிடித்தார் ராஜா. வாகனக் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில், வாராக் கடன் வசூல் பிரிவில் ராஜாவும், தனியார் பள்ளி ஆசிரியையாக உஷாவும் இல்வாழ்க்கையைத் தொடங்கினர். 
எமனாக வந்த வாகனச் சோதனை: உஷாவின் தோழியின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்காக பரிசு (டேபிள் டாப் கிரைண்டர்) வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் தஞ்சாவூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்த இவர்களை, துவாக்குடியில் தலைக்கவச சோதனை என்ற பெயரில் காவல்துறை வழிமறித்தது. 
அடுத்து நடந்தவற்றை ராஜாவே கூறியது: போலீஸார் வழிமறித்ததும் சாலையோரம் ஒதுங்கி வாகனத்தை நிறுத்தினேன். கோபத்துடன் வந்து முதலில் சாவியை பிடுங்கினார் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ். பின்னர், சாவியை வாகனத்தில் வைத்தார். அப்போது, அவருடனிருந்த காவலர் ஒருவர் செல்லுமாறு சைகை கூறியதால், அங்கிருந்து புறப்பட்டேன். ஆனால், அடுத்த விநாடியே மற்றொரு வாகனத்தில் காவல் ஆய்வாளர் எங்களை விரட்டி வந்தார். கோபமாக வாக்குவாதம் செய்தபடியே எனது மனைவியின் மீது காலால் எட்டி உதைத்தார். இதில், நிலைதடுமாறி சாலையில் இருவரும் விழுந்தோம். ரத்தக்காயம் ஏற்பட்டதை பார்த்து ஆய்வாளர் அங்கிருந்து தப்பியோடினார். மெல்ல எழுந்து வந்து எனது மனைவியை தூக்கியபோது அவரது காதில் இருந்து ரத்தம் வழிந்தது. மூச்சு இழுத்துக் கொண்டிருந்தது. கைகளில் தூக்கி கதறியபடியே இருந்தேன். அவரது மூச்சு என் கைகளிலேயே கரைந்துபோனது. 2 ஆவது முறை கர்ப்பமாகி 3 மாதம் என மகிழ்ச்சியாக இருந்தோம். எனது காதல் மனைவியின் கருவும், உயிரும் எனது கைகளிலேயே ரத்தமும், சதையுமாக கரைந்துபோனது என கண்ணீர் வடித்தார் ராஜா. துவாக்குடி அரசு மருத்துவமனையில் உஷா அணிந்திருந்த நகைகளை கழற்றி ராஜாவின் கைகளில் மருத்துவர் அளித்தபோது, அதனைப் பெற்றுக் கொண்டு கதறியவர், கதறிய வண்ணமே உள்ளார்.
நிச்சயதார்த்த விழாவுக்கு புறப்பட்டு வந்து தோழியையும், சுற்றத்தையும் மட்டுமல்லாது தன்னையும் தவிக்கவிட்டு சென்றுவிட்டதாக பார்ப்போரிடம் எல்லாம் கதறி அழுது மாய்ந்துபோகிறார் ராஜா. கர்ப்பிணி உஷா உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையின் ஈரல் மட்டும் கெட்டுப்போகவில்லை. ஒட்டுமொத்த உடலும் அழுகி துர்நாற்றமெடுத்துள்ளது.
திருச்சியில் விழுந்த விதை!
தலைக்கவசம் என்ற பெயரால் தமிழகம் முழுவதும் வாகனச் சோதனை நடத்தி காவல்துறை நடத்தி வந்த அராஜகப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருச்சியில் விதையாக விழுந்துள்ளார் உஷா. திருச்சி மாநகரில் ஏற்கெனவே சரஸ்வதி என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தில் தகித்து கொண்டிருந்த மக்கள் உஷா மரணத்தில், தன்னெழுச்சிப் போராட்டமாக கிளர்ந்தெழுந்தனர். இது, தமிழகம் முழுவதும் பரவியதால் காவல்துறை சார்பில் தலைக்கவச சோதனைக்கு தாற்காலிக ஓய்வு அளிக்கும்படி வாய்மொழி உத்தரவு அனைத்து மாவட்டங்களுக்கும் வரப்பெற்றுள்ளது. உயிரை விலை கொடுத்துதான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என காவல்துறை இனி ஒருபோதும் செயல்படக் கூடாது என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT