தமிழ்நாடு

நவீன ஆவின் பாலகங்கள் - புதிய கட்டடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

DIN

நவீன ஆவின் பாலகங்களையும், புதிய கட்டடங்களையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் அவர் திறந்து வைத்தார். இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
மதுரை பால் பண்ணை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள துணைப் பதிவாளர் அலுவலகக் கட்டடத்தையும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி, கோவை பச்சாபாளையம் புதிய பால் பண்ணை வளாகம் ஆகிய இடங்களில் அதிநவீன ஆவின் பாலகங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறைக்கு ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை முதல்வர் பழனிசாமி திறந்தார். மீன்வளத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் அகரப்பேட்டை கிராமத்தில் மீன்குஞ்சு வளர்ப்பு மையம், ஆச்சாம்பட்டி கிராமத்தில் மீன் தீவன ஆலை, திருவள்ளூர் மாவட்டம் ஜாம்பவானோடை மீனவ கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளம், நல்லிக்கோட்டை கிராமத்தில் மீன்குஞ்சு உற்பத்தி மையத்துக்கான கட்டடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், காஞ்சிபுரத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த கட்டடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான திட்டங்கள்: சென்னை நகருடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பான நொளம்பூரில் கழிவு நீரகற்றும் கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன்மூலம், 28 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.
சென்னையை அடுத்த காரம்பாக்கம் பகுதிகளில் குடிநீர் திட்டம், மதுரவாயல் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறையிலுள்ள குடியிருப்புகளுக்கும், பெரியகுளம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம், கம்பம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றறனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT