தமிழ்நாடு

டிடிவி தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு: முதல்வர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! 

DIN

புதுதில்லி: டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, தங்கள் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. ஆகவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் தரப்புக்கு, புதிய பெயரில் இயங்கும் வகையில் கட்சியின் பெயரை ஒதுக்குவதற்கும், குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் அனுமதி அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பாலி முன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், டி.டி.வி. தினகரன் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி, 'உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் வரையிலும் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒதுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற தாமதம் எங்கள் அணியின் அரசியல் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்' என்று வாதிடப்பட்டது.

இந்நிலையில், குக்கர் சின்னம் கோரும் வழக்கின் தீர்ப்பை நீதிபதி ரேகா பாலி கடந்த வெள்ளியன்று  வெளியிட்டார். அதில், தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்திருந்தார். இது தினகரன் அணியினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யும் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹ்தகி மூலமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் டிடிவி தினகரன் ஒரு சுயேட்சை. அவர் அரசியல் கட்சி எதுவும் துவங்கக் கூட இல்லை. அவருக்கு எவ்வாறு ஒரு குறிப்பிட்ட சின்னத்தினை ஒதுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த மனுவானது வரும் 26 அல்லது 27 அன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT