தமிழ்நாடு

ஆள்வோருக்கு கண்ணீரால் நனைந்த கண்டனம்: தமிழக பட்ஜெட் மீது கமல் விமர்சனம்! 

DIN

சென்னை: தமிழக மக்களின் கடன்சுமையை எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவருக்கு எங்கள் கண்ணீரால் நனைந்த கண்டனம் என்று தமிழக பட்ஜெட்டை மக்கள் நீதி மய்யம் அமைப்பின் தலைவர் கமல் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டைடை வியாழனன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பட்ஜெட் தொடர்பான தனது கருத்துக்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெள்ளியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

2018-19 தமிழக பட்ஜெட் - எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்ய வேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். நிதிநிலை அறிக்கைப் பற்றிய எம் கருத்து

முதலில் தோன்றும் குறளை தவிர, இந்த நிதிநிலை அறிக்கை பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே, விவசாயிகள், நெசவாளர்கள், மீனவருக்கு, சிறப்பான திட்டம் ஏதும் இல்லை. எம் தமிழ் மக்களின் வருங்காலத்தை வடிவமைக்க இதைவிட சிறந்த பிரதிநிதிகள் தேவை

வேலை தேடுபவர்ர்கள் ஒரு கோடிக்கும் மேல், அதில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள். ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் 4 லட்சம் இளைஞர்களே திறன் பெற்றனர். அதிலும், 1 லட்சம் இளைஞர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு எங்கே?

மேற்கு தமிழகத்தினரின் அத்திக்கடவு - அவினாசி திட்டம் தங்களுக்கு நீர் வழங்குமென பல ஆண்டுகளாக காத்திருக்க, இம்முறை அறிவித்த ரூ.250 கோடியும் சென்ற ஆண்டைப்போல கானல் நீராய் ஆகிவிடுமோ?

குடிமராமத்துக்கும் தற்போது சென்ற ஆண்டைப்போல ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது. சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை எங்கே செலவிடப்பட்டது என்ற விளக்கம் கிடைக்குமா?

27 ஆயிரம் கோடி பள்ளிக்கல்விக்கு செலவழித்த பின்னரும், எம் பிள்ளைகள் தேசிய சராசரியை விட பின் தங்கியுள்ளனர். இது தான் தரமான கல்வியா? எங்களுக்கு செலவீடல்ல, நல்ல விளைவுகளே தேவை.

2015-ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான 2.42 லட்சம் கோடி ரூபாயில் 62 ஆயிரம் கோடியே செயல்படுத்தப்பட்டுள்ளது. தொழில்புரிவோருக்கு ஊழலும், தாமதமும் இன்றி உரிமங்கள் வழங்கட்டும் இந்த அரசு.

சென்னை மாநகரம் இந்தியாவின் 23 நகரங்களில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கிறது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 500 கோடி அதனை உயர்த்த உதவட்டும். அளவிற்கு அதிகமாக ஆசைப்படுகிறோமா?

என் பகுத்தறிவு ஒரு புறம் இருக்கட்டும். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே ஏன்? காணாமல் போன ஆயிரம் சிலைகளை போல துறையையும் காணாமல் போய் விட்டதோ?

வக்ஃப் போர்டு தேர்தலை திடீரென ரத்து செய்தது தமிழக அரசு, தேர்தலையே நடத்தாத அரசு நிதிநிலை அறிக்கையில் தங்களுக்கு அளிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றும் என சிறுபான்மையினர் எப்படி நம்புவர்?

ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் 45 ஆயிரம் ரூபாய். எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவருக்கு எங்கள் கண்ணீரால் நனைந்த கண்டனம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT