தமிழ்நாடு

அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவி: விண்ணப்பித்தோர் விவரத்தை வெளியிடாதது ஏன்?

DIN

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான மூன்று பேர் பட்டியலை அடுத்த இரண்டு வார காலங்களில் தேடல் குழு சமர்ப்பிக்க உள்ள நிலையில், இந்தப் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் விவரம் வெளியிடப்படாமலே இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்ய, கடந்த 2017 நவம்பர் மாத இறுதியில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் மூன்றாவது தேடல் குழு அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இரண்டு தேடல் குழுக்களும், பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டன.
தமிழக அரசின் புதிய விதிகளின்படி, தேடல் குழு அமைக்கப்பட்ட நான்கு மாதங்களில் அதன் பணிகளை முடித்து, மூன்று பேர் பட்டியலை, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்ற இந்தக் குழு, அவற்றைப் பரிசீலித்து இப்போது இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. 
வெளிப்படைத் தன்மை... இதற்கிடையே, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சை எனப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் உள்ளிட்ட முக்கியப் பதவிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருச்சி பாரதிதாசன் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் நியமனத்தின்போது, அதற்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதுபோல, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் கல்வியாளர்கள் முன்வைத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட, தேடல் குழு நிர்வாகிகளும், உயர் கல்வித் துறை அதிகாரிகளும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றனர்.
ஆனால், இந்தப் பதவிக்கான மூன்று பேர் பட்டியலை தேடல் குழு இன்னும் இரண்டு வாரங்களில் ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ள நிலையில், விண்ணப்பித்தவர்கள் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
160 பேர் விண்ணப்பிப்பு: இது குறித்து தேடல் குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு மொத்தம் 160 பேர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மூன்று பெயர்களை தெரிவு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வார காலத்தில், பட்டியல் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிடும். 
மேலும், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில, வெளியிடும் எண்ணம் தேடல் குழுவுக்கு இல்லை. ஏனெனில், அவ்வாறு பெயர்களை வெளியிடுவது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது. வேறு பதவிகளுக்கு அவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்போதுதான் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT